தமிழ்நாட்டில் நேற்று 2,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதிதாக 32,793 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 1,483 பேரும், பெண்கள் 1,189 பேரும் உள்பட மொத்தம் 2,672 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 1,072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 373 பேரும், திருவள்ளூரில் 131 பேரும், காஞ்சிபுரத்தில் 81 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இரண்டாவது அலையின்போது பாதிப்பு எண்ணிக்கையாது 500 பேரிலிருந்து 2,500 பேராக அதிகரிக்க 47 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஆனால், மூன்றாவது அலையில் 12 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொண்டது. இதே பரவல் வேகம் தான் தற்போது 4வது அலையிலும் நிகழ்ந்து வருவதாகத் தெரிகிறது. தற்போதைய பரவல் வேகம் 3வது அலையின்போது ஏற்பட்ட பரவல் வேகத்தை பிரதிபலிக்கிறது.
3வது அலையின்போது, அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி 597 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். டிசம்பர் 31ம் தேதி 1,155 ஆக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. அதே எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி 1,594 பேராக உயர்ந்தது. ஜனவரி 4ம் தேதி 2,731 ஆக கிடுகிடுவென அதிகரித்தது. ஜனவரி 22ம் தேதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,744 ஆனது.
நான்காவது அலை எனக் கருதப்படும் தற்போதைய சூழ்நிலையில், ஜூன் 1ம் தேதி 139 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 16ம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 552 ஆக அதிகரித்தது. அதே மாதம் 23ம் தேதி 1,063 பேருக்கு தொற்று உறுதியானது. 29ம் தேதி 1,827 பேரும், 30ம் தேதி 2,069 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் 683 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,487 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த வீடு திரும்பினர். தற்போதைய சூழலில் 14,504 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். அவர்களில் 5 சதவீதம் பேர் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் கொரோனாவின் தாக்கம் குறையும் என்று சுகாதாரத் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
source https://news7tamil.live/fourth-wave-spreading-in-tamil-nadu-as-similar-to-third-wave.html