சனி, 2 ஜூலை, 2022

நுபுர் ஷர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்; நபிகள் குறித்து சர்ச்சை கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

 

1 7 2022 

நீதிபதி சூர்ய கான்ட் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட விடுமுறைக் கால அமர்வு, நபிகள் குறித்த சர்ச்சைக் கருத்துகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்கக் கோரி நுபுர் சர்மா தாக்கல் செய்த மனுவை விசாரித்த போது, நீதிபதி சூர்ய கான்ட் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கடுமையாகச் சாடியது. “நாட்டில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு அவர் மட்டுமே பொறுப்பு; அவர் அவசியம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இரண்டு நீதிபதிகள் கொண்ட விடுமுறைக் கால அமர்வின் தலைமை நீதிபதி சூர்ய கான்ட், சர்ச்சை கருத்துகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு எஃப்.ஐ.ஆர்.களை ஒன்றாக சேர்த்து விசாரிக்கக் கோரி நுபுர் ஷர்மா தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் போது இவ்வாறு கூறினார்.

மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங், நுபுர் ஷர்மா உயிருக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டினார். அதற்கு, “அவருக்கு (நுபுர் ஷர்மா) அச்சுறுத்தல் இருக்கிறதா அல்லது அவர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டாரா? அவர் நாடு முழுவதும் உணர்ச்சி கொந்தளிப்பைத் தூண்டிய விதம்… நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கு இந்தப் பெண்ணே பொறுப்பு” என்று நீதிபதி சூர்ய கான்ட் கூறினார்.

வழக்கறிஞர் மணீந்தர் சிங், நுபுர் ஷர்மா எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டதாக கூறினார். ஆனால், நீதிபதி சூர்ய கான்ட் “அவர் தனது கருத்தை திரும்பப் பெறுவதில் மிகவும் தாமதப்படுத்திவிட்டார்” என்று குறிப்பிட்டார். மேலும், உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

“அவள் எப்படி கொந்தளிப்பைத் தூண்டினார் என்பது பற்றிய விவாதத்தை நாங்கள் பார்த்தோம். ஆனால், அவர் இதையெல்லாம் சொல்லிவிட்டு, பின்னர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்று சொன்ன விதம் வெட்கக்கேடானது… அவர் டிவி முன்பு சென்று நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்” என்று நீதிபதி கூறினார்.

அவர் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகியதைக் குறிப்பிட்ட நீதிபதி சூர்ய கான்ட், “நாட்டின் மாஜிஸ்திரேட்டுகள் அவருக்கு மிகவும் சிறியவர்கள் என்ற அவரது ஆணவத்தை இந்த மனு காட்டுகிறது” என்றார். “அவர் ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தால் என்ன செய்வது. அவர் தனக்கு அதிகாரத்தின் பாதுகாப்பு இருப்பதாக நினைக்கிறார். மேலும், நாட்டின் சட்டத்தை மதிக்காமல் எந்த கருத்தையும் கூறலாம் என்று நினைகிறார்” என்று நீதிபதி சூர்ய கான்ட் கூறினார். மே 27 ஆம் தேதி ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பான விவாதத்தின் போது நுபுர் ஷர்மா சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார்.

தொலைக்காட்சி விவாதத்தை விமர்சித்த நீதிபதி சூர்ய கான்ட், அது ஏன் நீதிமன்ற விசாரணையில் உள்ள தலைப்பை விவாதத்திற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று கேட்டார். “டிவி விவாதம் எதற்கு? அது ரசிகர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு மட்டுமா? ஏன் நீதிமன்ற விசாரணையில் உள்ள விஷயத்தை விவாதத்திற்கு தேர்வு செய்தார்கள்,” என்று கேட்டார். தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இந்த கருத்துக்கள் இருந்தன என்று சுட்டிக்காட்டப்பட்டபோது, ​​​​இந்த வழக்கில் தொகுப்பாளருக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

வழக்கறிஞர் மணீந்தர் சிங், அத்தகைய எண்ணம் இல்லை என்று சுட்டிக்காட்டினார். மறுபக்கத்தில் விவாதத்தில் பங்கேற்றவர் “சிவ லிங்கம் வெறும் நீரூற்று அல்லது பனிக்கட்டி என்று மீண்டும் மீண்டும் கூறினார். தொகுப்பாளர் அல்ல” என்று கூறினார். மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் மேலும் கூறுகையில், “இதுதான் நிலைப்பாடு என்றால், அனைத்து குடிமகனுக்கும் பேச்சுரிமை இருக்காது.” என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறையின் நடவடிக்கையை விமர்சித்த நீதிமன்றம், “டெல்லி காவல்துறை என்ன செய்தது? எங்களைப் பேச வைக்காதீர்கள்” என்று கூறியது.

இறுதியில், நுபுர் ஷர்மாவுக்கு நிவாரணம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிபதி சூர்ய கான்ட், நுபுர் ஷர்மாவின் வழக்கறிஞரிடம், “இல்லை மிஸ்டர் சிங், நீதிமன்றத்தின் மனசாட்சி திருப்தி அடையவில்லை. அதற்கேற்ப சட்டத்தை வடிவமைக்க வேண்டும்.” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/nupur-sharma-must-apologise-to-nation-supreme-court-slams-her-473454/