வியாழன், 11 ஆகஸ்ட், 2022

சர்வாதிகாரியாக மாறுவேன்; போதைப்பொருள் நடமாட்டத்திற்கு எதிராக ஸ்டாலின் எச்சரிக்கை

 

Stalin warns officials against illegal drug movement and says he can change as dictator: நான் சாஃப்ட்- (Soft) ஆன முதல்வர் என யாரும் கருத வேண்டாம். நேர்மையானவர்களுக்கு தான் நான் சாஃப்ட். தவறு செய்பவர்களுக்கு, குறிப்பாக போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணை போகிறவர்களுக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் போதைப்பொருள் தடுப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளை கண்காணிக்க வேண்டும். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுடன் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இணைப்புக்கப்படும் என்ற அறிவிப்புக்கு விரைவில் அரசாணை வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி நியமிக்கப்படுவார்.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் பேருந்துகளை கண்காணிக்க வேண்டும். சோதனை சாவடிகளில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும். வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் குழுக்கள் அமைத்து கஞ்சா விற்பதை தடுக்க வேண்டும்.

போதை பாதை அழிவு பாதை, அதில் யாரும் செல்லாதீர்கள். மற்றவர்களையும் செல்ல விடாதீர்கள். போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம் என வலியுறுத்துங்கள். பள்ளி, கல்லூரிகளின் முன்பு போதைப்பொருள் விற்போருக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்ய வேண்டும். போதைப்பொருளை ஒழிக்க போலீசார் உறுதியேற்க வேண்டும். போதைப்பொருள் குறித்து புகாரளிக்க இலவச எண்ணை அறிவிக்க வேண்டும். காவல்துறை மட்டுமல்ல, பொதுமக்களும் சேர்ந்து போதைப் பாதையை அடைக்க வேண்டும், என்று கூறினார்.

பின்னர், போதைப்பொருள் தடுப்பில் தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் சிறப்பாக செயல்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

மேலும், சமுதாயத்திற்கே சீரழிக்க கூடிய போதை பொருள் நடமாட்டத்திற்கு எந்த வகையிலும் துணை போக கூடாது. இதை நான் விளையாட்டாக சொல்லவில்லை என கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நான் சாஃப்ட் – ஆன முதலமைச்சர் என யாரும் கருத வேண்டாம், நேர்மையானவர்களுக்கு தான் நான் சாஃப்ட், தவறு செய்பவர்களுக்கு, குறிப்பாக போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணை போகிறவர்களுக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன்.

இதற்கான அதிகாரத்தை நான் எங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை. என்.டி.பி.எஸ் சட்டத்தில் உள்ள 32 பி.ஏ பிரிவை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் தமிழ்நாட்டுக்குள் போதைப்பொருள் அறவே கூடாது. அந்த இலக்கை நோக்கி நடைபோடுவோம். இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-warns-officials-against-illegal-drug-movement-and-says-he-can-change-as-dictator-492654/

Related Posts: