18 07 2022
நமது எதிரிகள் நினைத்துக் கூட பார்க்காத ஆயுதங்களை நமது நாடு பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கடற்படை நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடற்படைத் தளபதி ஹரி குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எளிதாக தயாரிக்கக்கூடிய பொருட்களுக்குக் கூட வெளிநாடுகளைச் சார்ந்து இருக்கும் பழக்கத்தை நாம் வளர்த்துக்கொண்டோம் என குறிப்பிட்டார். போதைக்கு அடிமையானவர்களைப் போல நாமும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடிமையாகி இருந்தோம் என கூறிய அவர், இந்த மனநிலையை மாற்றும் நோக்கில் 2014க்குப் பிறகு பாதுகாப்புத் தறையில் புதிய சூழலை உருவாக்க தனது அரசு பாடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
21ம் நூற்றாண்டில் பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்பு அடைவது மிகவும் முக்கியமானது என தெரிவித்த பிரதமர், இதற்கான முதற்படியாக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கடற்படைக்குத் தேவையான தொழில்நுட்பங்களில் 75 உள்நாட்டு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட இருப்பதாகக் குறிப்பிட்டார். நாடு தனது 100ம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, நினைத்துப் பார்க்க முடியாத உயரத்திற்கு நாட்டின் பாதுகாப்புத் துறையை கொண்டு செல்வதே இலக்காக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
உலகம் வைத்திருக்கும் அதே 10 ஆயுதங்களுடன் நமது வீரர்களை களம் இறக்குவது புத்திசாலித்தனம் இல்லை என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இத்தகைய ரிஸ்க்கை தன்னால் எடுக்க முடியாது என கூறினார். மாறாக, எதிராளி நினைத்துப் பார்க்காத ஆயுதங்கள் நமது வீரர்களிடம் இருக்க வேண்டும் என்றும் அது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் துறைக்கான இறக்குமதியில் கடந்த 5 ஆண்டுகளில் 21 சதவீதம் குறைந்திருப்பதாகவும், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதி அவற்றை இந்திய நிறுவனங்களிடமிருந்து வாங்குவதற்கே செலவிடப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்த நமது நாடு, தற்போது பெரிய ஏற்றுமதியாளராக வேகமாக முன்னேறி வருவதாக அவர் கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறையின் பல பிரிவுகளில் நாம் தன்னிறைவை அடைந்திருப்பதாகவும், இதன் காரணமாக இந்தியா குறித்த பிம்பம் மாறி இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் கடற்படை அதன் பட்ஜெட்டில் 64 சதவீதத்தை உள்நாட்டு கொள்முதலுக்காக செலவிட்டதாகத் தெரிவித்த ராஜ்நாத் சிங், இந்த ஆண்டு அது 70 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
source https://news7tamil.live/my-jawan-will-have-what-the-opponent-will-not-even-think-of-pm-narendra-modi.html