செவ்வாய், 19 ஜூலை, 2022

பள்ளி மாணவி மரண வழக்கு; தாளாளர் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு

 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிக தீவிரமடைந்து வன்முறையாக மாறியது.

இதில் போராட்டக்காரர்கள் பள்ளியின் பேருந்தை டிராக்டரால், சேதப்படுத்தினர். பள்ளியில் உள்ள பொருட்களையும் சூறையாடினர். இதுமட்டும் இல்லாமல் இந்த வன்முறையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில் காவல்துறையினர் படுகாயமடைந்தனர். மேலும் பள்ளி வாகனங்கள், மேஜைகள், கண்ணாடிகள் என கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் போராட்டக்காராக்கள் அடித்து நொறுக்கி, எரித்து சாம்பலாக்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட 379 பேரை போலீசார் கைது செய்தனர். 125 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவ்வழக்கில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சூழலில் மாணவி ஸ்ரீமதியின் வேதியியல் ஆசிரியையான ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான தனியார் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 5 பேரையும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

source https://news7tamil.live/kallakurichi-school-girl-death-case-5-people-including-the-school-principal-were-jailed.html