திங்கள், 18 ஜூலை, 2022

Hashtag Politics | விரக்தியில் நாடு.. மோடி பேச்சை பகிர்ந்த ராகுல் காந்தி..!

 17 07 2022 இந்திய ரூபாயின் மதிப்பு ஜூலை 14ஆம் தேதி ரூ.80 ஆக சரிந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) 8 பைசா மீண்டு ரூ.79.91 ஆக இருந்தது. இதற்கிடையில், கச்சா எண்ணெய், மின்னணு பொருள்கள், வெளிநாட்டு கல்வி பயணம் என பணவீக்கம் மேலும் மோசமாகலாம்.

இந்தப் பிரச்சினையை 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் பாஜக எப்படி எடுத்துச் சென்றது என்று எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்துவருகின்றனர்.
2014ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்தியில் நரேந்திர மோடி பேசியதை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, “அன்று காட்டுக் கூச்சல் போட்டீர்கள்… இன்று ரூபாய் மதிப்பு வேகமாக சரிந்துவருவதைக் கண்டு அமைதியாக இருங்கள்” எனக் கூறியுள்ளார்.

அதேபோல் மற்றொரு ட்வீட்டில், பண மதிப்பு ரூ.70 ஆக இருக்கும்போது ஆத்மநிர்பார் (சுயசார்பு இந்தியா) என்றீர்கள். தற்போது ரூ.80 ஆகிவிட்டது, என்னவொரு ஆச்சரியம்” எனக் கலாய்த்துள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் மின்னஞ்சலில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, பணவீக்கம் காரணமாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தவிர்க்க முடியாது” என்றார்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு மில்லியன் நபர்களுக்கு வேலை வாய்ப்பு திட்டம், வேலைவாய்ப்பு நெருக்கடியை குறைக்க உதவாது” என்றும் விமர்சித்தார்.
இதற்கு மத்தியில் நாட்டின் அந்நிய செலாவணி குறைந்துவருதை சுட்டிக் காட்டிய எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்கா, “அந்நிய செலாவணி கையிறுப்பு வேகமாக கரைந்துவருகிறது.

மறுபுறம் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிகண்டுவருகிறது. இது பெரும் ஆபத்திற்கான சமிக்ஞை. இந்த விவகாரத்தில் அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, ஆப் கி ஃபார் நரேந்திர மோடி சர்க்கார் என்று தேர்தல் நேரத்தில் ஒலித்த பரப்புரை பஞ்ச்-ஐ சற்று மாற்றி ஆப் கி ஃபார், 80 பார் என விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே, இந்திய ரூபாய் வீழ்ச்சியை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனவரியில் இந்திய ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட 40 பில்லியன் டாலரை செலவழித்துள்ளது” என்றார். தொடர்ந்து மோடியின் 2013ஆம் ஆண்டு அறிக்கையை பகிர்ந்துள்ள தெலங்கானா தகவல் தொடர்பு அமைச்சர் கேடிஆர் (கே தரகா ராமா ராவ்) மோடி ஆட்சிக்கு முன்பு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.63ஆக இருந்த நிலையில் தற்போது 80 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதைப் பார்க்க மைக்ரோஸ்கோப் அல்ல நானாஸ்கோப் தேவைப்படும் போல் உள்ளது” என்றார்.


source https://tamil.indianexpress.com/india/why-is-modi-silent-on-rupee-fall-now-480790/