புதன், 19 ஜூலை, 2023

ரூ 1000 மகளிர் உரிமை தொகை; இவ்வளவு சிக்கல் இருக்கு: ரேஷன் ஊழியர்கள் சங்கம் கொதிப்பு

 தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தினேஷ்குமார் காலை நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை தடையின்றி வழங்க வேண்டும்.

தற்போது சிறப்பு முகாமுக்காக ரேஷன் கடைகளில் இருந்த பயோமெட்ரிக் இயந்திரத்தை எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால், ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் என்னென்ன பொருள்களை வழங்கினோம் என்பதை எழுதி பொருள்களை கொடுத்து வருகிறோம்.

இதற்கிடையில், வீடுதோறும் சென்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன், விண்ணப்பப் படிவம் வழங்கும் பணியையும் ரேஷன் கடை பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது எளிதானது அல்ல.
விண்ணப்பப் படிவம் வழங்க தெருக்களுக்குச் செல்லும்போது எங்களிடம் அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளன.

ஒருவரின் டோக்கனை வேறு நபர்களிடம் கொடுக் இயலாது. இதனால் அவர்கள் வீட்டில் இல்லாத பட்சத்தில் டோக்கன் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். மீண்டும் நாங்கள் அந்த நபரை தேடிச் செல்ல வேண்டும்.

எனவே, வீடுகளுக்குச் சென்று கலைஞர் உரிமைத் தொகைக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பப் படிவம் வழங்கும் முறையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, கடைகளிலேயே வழங்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/the-ration-shop-workers-union-listed-problems-with-the-rs-1000-scheme-725607/