அமைச்சர் பொன்முடியிடன் 2 வது நாளாக விசாரணை நடைபெற்றது. 6 மணி நேரம் விசாரணை நடந்தது. மீண்டும் தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பொன்முடிக்கு சொந்தமான சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி கோவில் அவென்யூவில் உள்ள அவரது வீடு உட்பட 7 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் இரவு முழுவதும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் முடிந்தது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் மீண்டும் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் வழங்கினர்.
மேலும் இந்த வழக்கு மற்றும் அன்னிய செலாவணி முறைகேடு விவகாரத்தில் ஆஜராவதற்கு அவருடைய மகன் டாக்டர் கவுதம சிகாமணி எம்.பி.க்கு சம்மன் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பொன்முடி மற்றும் கவுதம சிகாமணி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இருவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணிக்கு ஆஜராகினர்.
அப்போது சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கணக்கில் வராத பணம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். சுமார் 6 மணி நேரமாக நீடித்த விசாரணைக்கு பிறகு, 10 மணியளவில் இருவரும் வீடு திரும்பினர். இந்நிலையில் தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-ponmudi-ed-second-day-investigation-6-hours-and-may-call-for-next-time-725645/