சிறுபான்மையினருக்கு எதிராக உருவாக்கப்படும் வெறுப்பையும் வன்முறையையும் தோற்கடிக்க நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம் என INDIA – கூட்டணியைச் சேர்ந்த 26 அரசியல் கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிடுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 24ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் நேற்றும், இன்றும் பெங்களூரூவில் நடைபெற்றது.
கூட்டம் நிறைவடைந்த பிறகு INDIA – கூட்டணியைச் சேர்ந்த 26 அரசியல் கட்சிகள் சேர்ந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் 26 முற்போக்குக் கட்சிகளின் தலைவர்களான நாங்கள், இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான எங்கள் உறுதியை இதன் வாயிலாக வெளிப்படுத்துகிறோம். நமது குடியரசின் தன்மை பாஜகவால் திட்டமிட்ட முறையில் கடுமையாக தாக்கப்பட்டு வருகிறது. நாம் நமது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்களான மதச்சார்பற்ற ஜனநாயகம், பொருளாதார இறையாண்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி தத்துவம் ஆகியவை மோசமான முறையில் சிதைக்கப்படுகின்றன.
மணிப்பூரில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கலவரம் குறித்து எங்களின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம். பிரதமரின் மௌனம் அதிர்ச்சியளிக்கிறது. இந்த நிலை முன்னெப்போதும் இல்லாதது. மணிப்பூரை மீண்டும் அமைதி மற்றும் நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வருவதற்கான அவசரத் தேவை உள்ளது.
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அரசியலமைப்பு உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதலை எதிர்த்துப் போராடவும், எதிர்கொள்ளவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நமது அரசியலின் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்த திட்டமிட்ட முயற்சி நடக்கிறது. பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் நடவடிக்கைகள் அனைத்து அரசியலமைப்பு விதிமுறைகளையும் மீறியுள்ளது.
அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக பாஜக அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது நமது ஜனநாயகத்தை சீரழிக்கிறது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் நியாயமான தேவைகள் மற்றும் உரிமைகள் மத்திய அரசால் முற்றிலுமாக மறுக்கப்படுகின்றன.
தொடர்ந்து அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது சிறு குறு தொழில்கள் மற்றும் அமைப்புசாரா துறைகளுக்கு சொல்லொண்ணாத் துயரத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக நமது இளைஞர்களிடையே பெரிய அளவில் வேலையின்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தேசத்தின் செல்வத்தை பொறுப்பற்ற நண்பர்களுக்கு விற்பதை நாங்கள் எதிர்க்கிறோம். நாம் ஒரு வலுவான மற்றும் மூலதன பலம் கொண்ட பொதுத்துறை மற்றும் செழிப்பான தனியார் துறையுடன் நியாயமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். விவசாயம் மற்றும் கூலி தொழிலாளர் நலனுக்கு எப்போதும் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும்.
சிறுபான்மையினருக்கு எதிராக உருவாக்கப்படும் வெறுப்பையும் வன்முறையையும் தோற்கடிக்க நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்; பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்களை நிறுத்த வேண்டும்; சமூக, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சமூகங்களுக்கும் நியாயமான விசாரணையைக் கோருதல் மற்றும் முதல் கட்டமாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டும்.
சக இந்திய குடிமகன்களை குறிவைத்து, துன்புறுத்தவும், ஒடுக்கவும் செய்யும் பாஜகவின் சதியை எதிர்த்துப் போராடத் தீர்மானித்துள்ளோம். அவர்களின் வெறுப்பு நச்சு பிரச்சாரம் மற்றும் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை எதிர்க்கும் அனைவருக்கும் எதிராக கொடூரமான வன்முறைக்கு கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இந்த தாக்குதல்கள் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மீறுவது மட்டுமல்லாமல், இந்திய குடியரசின் அடிப்படை மதிப்புகளான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் மற்றும் நீதி – அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தை சிதைக்கிறது.
இந்திய வரலாற்றை திரித்து மாற்றுவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் முயற்சியில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மாற்று அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான நோக்கத்துடன் செயல்படுவோம் என நாங்கள் உறுதியளிக்கிறோம். தற்போதைய அரசின் நிர்வாகத்தில் இருக்கும் குளறுபடிகளை ஜனநாயகத்துடன் அனைவரின் பங்களிப்பு மற்றும் ஆலோசனையோடு மேம்படுத்துவோம் என உறுதியளிப்பதாகவும் அவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
source https://news7tamil.live/pledge-of-india-alliance-26-parties-jointly-report.html