புதன், 19 ஜூலை, 2023

TN MBBS Counselling 2023: எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்காதா? இவ்ளோ ஆப்ஷன் இருக்கு – ஜெயபிரகாஷ் காந்தி விளக்கம்

 

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கட் ஆஃப் அதிகரித்துள்ள நிலையில், மாற்று வாய்ப்புகள் என்னென்ன உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைவில் கவுன்சிலிங் நடைபெற உள்ளது. அதேநேரம், இந்த ஆண்டு அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான கட் ஆஃப் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

இந்த நீட் தேர்வு எழுதி அதிகமான மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இருப்பினும் கட் ஆஃப் மதிப்பெண்கள் உயர்ந்துள்ளதால், அதிக கட் ஆஃப் இருந்தால் தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இந்த 450 மார்க்கிற்கு மேல் எடுத்து எம்.பி.பி.எஸ் படிப்பு தான் தங்களின் ஒரே கனவு என்று நினைக்கும் மாணவர்கள், முதல் முறை நீட் தேர்வு எழுதியவர்களாக இருந்தால், நிச்சயமாக நீங்கள் மறுமுயற்சி எடுக்கலாம். அதாவது அடுத்த ஆண்டு தேர்வை எழுதலாம்.

அதேநேரம், நீங்கள் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று முயற்சித்தவர்கள் என்றால், பொறியியல் படிப்புகளை தேர்வு செய்வது சிறந்தது. நீங்கள் மருத்துவம் சார்ந்த துறைகளில் பணிபுரிய விரும்பினால், ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் உங்களுக்கு உதவும். ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் ஹெல்த் கேர் என்பது வேகமாக வளர்ந்து வரும் துறையாக உள்ளது. எனவே நீங்கள் பொறியியல் படித்தாலும், மருத்துவ துறையில் பணிபுரியலாம். தற்போது ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் டாக்டர் என்பதும் அறிமுகமாகி வருகிறது.


உங்களுக்கு பொறியியல் படிக்க விரும்பவில்லை என்றால், இளங்கலை கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) அல்லது மீன்வளம் படிப்புகளை தேர்வு செய்யலாம்.

அடுத்ததாக பி.பார்ம், பிஸியோதெரபி மற்றும் பாராமெடிக்கல் படிப்புகளை படிக்கலாம். பின்னர் நீங்கள் மேலும் முன்னேற விரும்பினால், இவற்றிற்குப் பிறகு எம்.பி.ஏ படிப்பில் ஹெல்த்கேர் பிரிவை தேர்வு செய்து படிக்கலாம்.

source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-neet-counselling-2023-best-medical-courses-besides-mbbs-in-tamil-725513/