திங்கள், 11 மே, 2026

யாருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்; யாருக்கு 100 யூனிட் இலவசம்? அரசின் முதல் அரசாணை முழு விவரம்

 தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 3 முக்கியக் கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட '200 யூனிட் இலவச மின்சாரம்' திட்டம் குறித்த அரசாணை தற்போது வெளியாகியுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

200 யூனிட் இலவச மின்சாரம்: யாருக்குப் பொருந்தும்?

2 மாதங்களுக்கு ஒருமுறை தங்களது வீட்டு மின் பயன்பாட்டை 500 யூனிட்டுகளுக்குள் வைத்திருக்கும் நுகர்வோருக்கு மட்டுமே மொத்தம் 200 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படும். ஒரு நுகர்வோர் 2 மாதங்களில் 500 யூனிட்டிற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தினால், அவர்களுக்குப் புதிய சலுகை பொருந்தாது. அவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள கட்டண முறையே தொடரும்; அதாவது ஏற்கனவே அமலில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரம் மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கும்.

இந்த புதிய மின்சார மானியத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,730 கோடி நிதிச் சுமை ஏற்படும். இதற்கான செலவினங்கள் 'தலைமை மின் ஆய்வாளர்' கணக்கின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்த அனுமதி, வரும் 2026-27 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் (Revised Budget Estimate) சட்டமன்றத்தின் மூலம் பெறப்படும். இந்த அரசாணையின் மூலம் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்கள் மின் கட்டணச் சுமையிலிருந்து பெரும் நிவாரணம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களின் பாதுகாப்பிற்கு 'வேலுநாச்சியார் அதிரடிப்படை'

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரத்யேகமாக 'வேலுநாச்சியார் அதிரடிப்படை' உருவாக்கப்படும் என்ற கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டுள்ளார். வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரில் அமையும் இந்தப் படை மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்.

போதைப்பொருள் இல்லாத தமிழகம்: 'தடுப்புப் படை' அமைப்பு

தமிழகத்தில் இளைஞர்களிடையே போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கத் தனி 'போதைப்பொருள் தடுப்புப் படை' (Anti-Drug Task Force) அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது சமூக நலன் சார்ந்த மிக முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-issues-official-order-for-200-units-free-electricity-check-eligibility-rules-government-releases-detailed-guidelines-11820124