சனி, 16 மே, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு; புனேவைச் சேர்ந்த வேதியியல் விரிவுரையாளரே காரணம்

 Kulkarni

பி.வி. குல்கர்னியை கைது செய்துள்ள புலனாய்வு முகமை, அவரே '2026-ஆம் ஆண்டு நீட் (NEET-UG) தேர்வு வினாத்தாள் கசிவின் மூலாதாரம்' என அடையாளம் கண்டுள்ளது. Photograph: (புகைப்படம்: சிறப்பு ஏற்பாடு)


நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ நடத்திய விசாரணையில், தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் தேர்வு செயல்முறைகளில் ஈடுபட்டு, வினாத்தாள்களை அணுகும் அதிகாரம் கொண்ட புனேவைச் சேர்ந்த வேதியியல் விரிவுரையாளர் ஒருவரை சி.பி.ஐ கைது செய்துள்ளது. மேலும், வினாத்தாள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களின் பட்டியலை வழங்குமாறு கல்வி அமைச்சகத்திடம் சி.பி.ஐ கேட்டுள்ளது.

சி.பி.ஐ தகவல்படி, பி.வி. குல்கர்னி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரே "2026 நீட் தேர்வு வினாத்தாள் கசிவின் மூலாதாரம்" என அடையாளம் காணப்பட்டுள்ளார். "NTA சார்பில் தேர்வுப் பணிகளில் குல்கர்னி ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. வினாத்தாள்களை அணுகும் வசதி அவருக்கு இருந்ததால், ஏப்ரல் 2026 கடைசி வாரத்தில் புனேவில் உள்ள தனது வீட்டில் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை அவர் நடத்தியுள்ளார். அங்கு மாணவர்களைத் திரட்டி, கசிந்த வினாத்தாள் தகவல்களை அவர்களுக்குக் கற்பித்துள்ளார்" என்று சி.பி.ஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

புனேவில் விசாரிக்கப்பட்ட குல்கர்னி பின்னர் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சிறப்பு வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவர்கள் பல லட்ச ரூபாய் கொடுத்ததாகவும், அங்கு கசிந்த வினாக்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதாகவும் சி.பி.ஐ கூறியுள்ளது.

புனேவைச் சேர்ந்த மனிஷா வாக்மரே என்பவரையும் சி.பி.ஐ கைது செய்துள்ளது. "வாக்மரேவின் உதவியுடன் குல்கர்னி இந்தச் சிறப்பு வகுப்புகளை ஒருங்கிணைத்துள்ளார். வினாக்கள், விடைகள் மற்றும் விருப்பத்தேர்வுகளை அவர் சொல்லச் சொல்ல, மாணவர்கள் தங்கள் நோட்டுப் புத்தகங்களில் கைப்பட எழுதியுள்ளனர். இவை மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வின் அசல் வினாத்தாளுடன் அப்படியே ஒத்துப்போகின்றன" என்று அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை அளித்த புகாரின் பேரில் மே 12 அன்று சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ஜெய்ப்பூர், குர்கான், நாசிக், புனே மற்றும் அகமதுநகர் ஆகிய இடங்களிலிருந்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாத்தூர் கோச்சிங் சென்டர் மீது விசாரணை:

லாத்தூரைச் சேர்ந்த பிரபல 'ஆர்.சி.சி' (RCC) கோச்சிங் சென்டர் உரிமையாளர் சிவராஜ் மோதேகாவ்கரிடம் கடந்த வியாழக்கிழமை சுமார் 11 மணி நேரம் சி.பி.ஐ விசாரணை நடத்தியது. இவரது பயிற்சி மையங்களில் வழங்கப்பட்ட "மாதிரி வினாத்தாள்களில்" இருந்த வினாக்கள், நீட் தேர்வில் வந்த வினாக்களுடன் ஒத்துப்போவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவின் மிகப்பெரிய மருத்துவப் பயிற்சி மையமாக விளங்கும் லாத்தூரின் கோச்சிங் தொழில்துறை தற்போது சி.பி.ஐ-யின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.


source https://tamil.indianexpress.com/india/neet-ug-2026-paper-leak-cbi-arrests-pune-chemistry-lecturer-latur-coaching-center-investigation-news-11839687