ஞாயிறு, 10 மே, 2026

முடிவுக்கு வராத‌ டீல்; ஈரான் பதிலுக்கு காத்திருக்கும் அமெரிக்கா

 

முடிவுக்கு வராத‌ டீல்; ஈரான் பதிலுக்கு காத்திருக்கும் அமெரிக்கா 9 5 2026

மத்திய கிழக்கில் அமெரிக்கா - ஈரான் இடையே நேரடி மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ள 14 அம்ச சமாதானத் திட்டத்திற்கு ஈரான் இன்று தனது அதிகாரப்பூர்வ பதிலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இதுகுறித்துத் தெரிவிக்கையில், ஈரானின் பதிலை வாஷிங்டன் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இன்று அந்தப் பதில் எங்களுக்குக் கிடைக்கக் கூடும் என்றார்.
உலகின் மிக முக்கியமான வர்த்தக பாதையான ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்க மற்றும் ஈரானிய கடற்படைகளுக்கு இடையே அங்காங்கே மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக ஈரானின் 'ஃபார்ஸ்' செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள கடல்சார் முற்றுகையை (Maritime blockade) முழுமையாக நீக்கினால் மட்டுமே அமைதி சாத்தியம் என்பதில் ஈரான் பிடிவாதமாக உள்ளது.
முன்னதாக, ஐநா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஈரான் அடியோடு நிராகரித்தது. இதுகுறித்து பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவின் இந்தத் திட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது; தனது ராணுவ அத்துமீறல்களை நியாயப்படுத்த சர்வதேச அமைப்புகளை வாஷிங்டன் கருவியாகப் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா களம் இறங்கியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் தீர்மானத்தை அமெரிக்காவும் பஹ்ரைனும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

ஒருபுறம் ஈரான் - அமெரிக்கா பதற்றம் நீடிக்க, மறுபுறம் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள டைர் டெப்பா, அல்-அப்பாசியே, புர்ஜ் ரஹால் உள்ளிட்ட 9 கிராமங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. அங்கு மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேலியக் குடியேறிகள் பாலஸ்தீனியர்களின் வீடுகளுக்குத் தீ வைத்துள்ளனர். குறிப்பாக ஜெனின் பகுதியில், அடக்கம் செய்யப்பட்ட ஒரு பாலஸ்தீனியரின் உடலைத் தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்குமாறு இஸ்ரேலியப் படைகள் மக்களைக் கட்டாயப்படுத்தியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ நடத்திய ஆய்வின்படி, அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை ஈரான் இன்னும் 4 மாதங்களுக்கு உறுதியாகத் தாக்குப் பிடிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது. இதனால், தற்போதைய நிலையில் பொருளாதார அழுத்தம் கொடுத்து ஈரானை அடிபணிய வைக்க முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளதாக 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. தூதரக ரீதியிலான முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், களத்தில் ராணுவ மோதல்கள் அதிகரித்து வருவதால் மத்திய கிழக்கு நாடுகள் பெரும் போர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.


source https://tamil.indianexpress.com/international/iran-us-war-live-updates-us-imposes-sanctions-on-companies-it-accuses-of-aiding-irans-weapons-sector-11816383