ஞாயிறு, 24 மே, 2026

தாம்பரம் ரயில் நிலையம் நவீனமயம் :

 

Amrit Bharat Station Scheme Tambaram railway station redevelopment Chennai suburban train news

Amrit Bharat Station Scheme | Tambaram railway station redevelopment | Chennai suburban train news

எழுதியவர்: அனிஷ் மொண்டல்

தெற்கு ரயில்வே மண்டலத்தின் சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் தாம்பரம் ரயில் நிலையத்தை, 'அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின்' கீழ் மறுசீரமைப்பு செய்யும் பணிகளை ரயில்வே அமைச்சகம் கணிசமாக முடுக்கிவிட்டுள்ளது. சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பயணிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நவீனமயமாக்கல் திட்டம் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூருக்கு அடுத்தபடியாக, சென்னையின் மூன்றாவது முக்கிய முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் திகழ்கிறது. புறநகர் பயணிகள், தொலைதூரப் பயணிகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே பயணிப்பவர்கள் என தினமும் சுமார் 1.67 லட்சம் பயணிகள் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

தாம்பரம் ரயில் நிலையத்தின் வரலாறு 1931-ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. தெற்கு ரயில்வேயின் தகவல்படி, 1928-இல் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, 1931-ஆம் ஆண்டு சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார புறநகர் இரயில் சேவை முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

என்னென்ன புதிய வசதிகள் வரவுள்ளன?

சென்னை கோட்ட இரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) ஏ. ஏழுமலை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மறுசீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை விவரித்துள்ளார்:

*நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில், மொத்தம் உள்ள 10 நடைமேடைகளையும் (Platforms) கடந்து செல்லும் 8 மீட்டர் அகலமுள்ள புதிய நடைமேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இது கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பயணிகள் எளிதாகப் பயணிக்கவும் உதவும். பழைய மேம்பாலமும் இதனுடன் சேர்ந்து தொடர்ந்து இயங்கும்.

*பயணிகளின் வசதிக்காக நடைமேடைகளில் மொத்தம் 9 லிஃப்டுகள் (Lifts) மற்றும் 10 எஸ்கலேட்டர்கள் (Escalators) அமைக்கப்படவுள்ளன.

*புதிய மேம்பாலத்திற்கு கூடுதல் சாலை அணுகல் வசதி, மேற்குப் பகுதியில் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய சுழற்சிப் பகுதி (Circulating area), நடைமேடைகளில் நிழற்குடைகள் மற்றும் கோச் வழிகாட்டி பலகைகள் (Coach guidance boards) ஆகிய இதர வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

தாம்பரம் ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் புறநகர் மற்றும் தொலைதூர இரயில்கள் இயக்கப்படுவதால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவாலானது என்று ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். ரயில் சேவைகளுக்கு எந்தவித இடையூறும் இன்றி, கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்போடு இந்த நவீனமயமாக்கல் பணிகள் கட்டம் கட்டமாக நடைபெற்று வருகின்றன.

source https://tamil.indianexpress.com/india/amrit-bharat-station-scheme-tambaram-railway-station-redevelopment-chennai-suburban-train-news-11868033