10 05 2026
/indian-express-tamil/media/media_files/2026/02/07/udhayanithi-2026-02-07-21-04-57.jpg)
எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி; தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு
தமிழக சட்டப்பேரவையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். தி.மு.க சட்டமன்ற குழுத் தலைவராக அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த மே 7-ம் தேதி மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சட்டமன்றக் குழுத் தலைவராகவும் உதயநிதி ஸ்டாலின் (இதன் மூலம் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகிறார்), துணைத் தலைவராக கே.என். நேருவும், கொறடா எ.வ. வேலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் தோல்வியடைந்தார். இதனால், சட்டமன்றத்தில் தி.மு.கவை வழிநடத்தப்போவது யார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் தற்போது அந்தப் பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய் இன்று (மே 10) பதவியேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட உள்ளார். தமிழக அரசியலில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளது. மே 11-ம் தேதி (நாளை) கூடவுள்ள 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகத் தனது பணியைத் தொடங்கவுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-appointed-as-tamil-nadus-leader-of-opposition-dmk-announces-new-assembly-roles-11820519





