திங்கள், 25 மே, 2026

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சர்ச்சை: 'உணர்ச்சிவசப்பட்டு அணுக வேண்டாம்'; அவசர வழக்கில் தலைமை நீதிபதி அறிவுரை

 cockroach campaign

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சர்ச்சை: 'உணர்ச்சிவசப்பட்டு அணுக வேண்டாம்'; தலைமை நீதிபதி அறிவுரை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிராக இணையத்தில் தொடங்கப்பட்ட 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janta Party - CJP) நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான பொதுநல மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சர்ச்சையின் பின்னணி: மே 15 அன்று நடந்தது என்ன?

கடந்த மே 15 அன்று நீதிமன்ற விசாரணையின் போது, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனக்கு ‘மூத்த வழக்கறிஞர்’ (Senior Advocate) அந்தஸ்து வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்த ஒரு வழக்கறிஞரைத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடிந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், வேலைவாய்ப்பு இல்லாத, இந்தத் தொழிலில் இடமில்லாத கரப்பான் பூச்சிகளைப் போன்ற சில இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஊடகவியலாளர்களாகவோ, சமூக ஊடகப் பதிவர்களாகவோ, தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) ஆர்வலர்களாகவோ மாறி, அமைப்பைத் தாக்கத் தொடங்குகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்து நாட்டின் இளைஞர்களை அவமதிப்பதாகக் கூறி இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தலைமை நீதிபதியின் மறுதின விளக்கம்

சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து, தாம் நாட்டின் இளைஞர்களை விமர்சிக்கவில்லை என்று தலைமை நீதிபதி விளக்கம் அளித்தார். போலிப் பட்டப் படிப்புகளை வைத்துக்கொண்டு வழக்கறிஞர் தொழில், ஊடகம், சமூக ஊடகம் போன்ற துறைகளுக்குள் நுழைந்து ஒட்டுண்ணிகளைப் போல் செயல்படுபவர்களை மட்டுமே நான் குறிப்பிட்டேன். இந்தியாவின் ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) என்ற புதிய அலை

தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மகாராஷ்டிராவை சேர்ந்த (தற்போது அமெரிக்காவில் இருக்கும்) 30 வயதான அபிஜீத் திப்கே என்பவர், பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கான தளம் என்று கூறி, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) என்ற பெயரில் இணையவழி நையாண்டிக் கட்சியைத் தொடங்கினார். மீம் அடிப்படையிலான நகைச்சுவையாகத் தொடங்கப்பட்ட இக்கட்சி, தற்போது வேலை வாய்ப்பின்மை மற்றும் நுழைவுத் தேர்வு முறைகேடுகளால் விரக்தியடைந்துள்ள இந்திய இளைஞர்களின் மிகப்பெரிய குரலாக உருவெடுத்து உள்ளது.

ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே இன்ஸ்டாகிராம் கணக்கு கிட்டத்தட்ட 19 மில்லியன் (1.9 கோடி) பின்தொடர்பாளர்களைக் கடந்துள்ளது. இது பாரதிய ஜனதா கட்சி (BJP), காங்கிரஸ் (INC) ஆகிய இரு தேசிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ கணக்குகளின் மொத்தப் பின்தொடர்பாளர் எண்ணிக்கையை விட அதிகமாகும். அதிகாரப்பூர்வ 'X' கணக்கு, உளவுத்துறையின் (IB) 'தேசிய பாதுகாப்பு' எச்சரிக்கையின் அடிப்படையில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ‘Cockroach is back’ என்ற புதிய கணக்கு தொடங்கப்பட்டு பிரச்சாரம் தொடர்கிறது. தற்போது இக்கட்சி #MainBhiCockroach ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, மத்திய கல்வி அமைச்சகத்தின் முடிவுகள், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சைகள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட்டக் குரல்களை முன்னெடுத்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன?

நாடு முழுவதும் இக்கட்சிக்கு எதிராகப் பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் என்.கே. கோஸ்வாமி தரப்பில் பொதுநல மனு (PIL) தாக்கல் செய்யப்பட்டு, அதை அவசரமாகப் பட்டியலிடக் கோரப்பட்டது.  நீதிமன்றத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு இடையே நடைபெறும் வாய்மொழி விவாதங்களைச் சமூக ஊடகங்களில் வணிக ரீதியாகவும், விளம்பரத்திற்காகவும் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். தலைமை நீதிபதி விளக்கம் அளித்த போதிலும், நீதித்துறைக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் திரிபுபடுத்தப்பட்ட தவறான பிரச்சாரங்களை இணையத்தில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி சட்டப் பட்டங்கள் பெற்று வழக்கறிஞர்களாகப் பணிபுரிபவர்கள் குறித்து சிபிஐ (CBI) விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரியபோது, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் அடங்கிய அமர்வு அதனை நிராகரித்தது. இதில் உடனடியாக விசாரிக்க வேண்டிய எந்தவொரு அவசரத் தேவையோ அல்லது தீவிரத்தன்மையோ இல்லை. இதை இவ்வளவு உணர்வுப்பூர்வமாக / உணர்ச்சிவசப்பட்டு (Sentimentally) அணுக வேண்டாம். போலி பட்டதாரிகள் விவகாரத்தில் அப்படிப்பட்ட தீவிர அவசரம் எதுவும் இல்லை, பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்யாமல், வழக்கமான நடைமுறையின்படி இந்த மனுக்கள் பின்னர் விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார். 

25 5 2026 


source https://tamil.indianexpress.com/india/dont-take-it-so-sentimentally-chief-justice-on-plea-against-cockroach-campaign-11871743