/indian-express-tamil/media/media_files/2026/05/25/mutton-kulambu-in-tamil-mutton-kuzhambu-recipe-2026-05-25-21-27-57.jpg)
Mutton Kulambu in Tamil | Mutton Kuzhambu Recipe
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் திருநாளை முன்னிட்டு, வீடுகளில் பிரியாணி மற்றும் மட்டன் உணவுகள் பிரதானமாக இடம்பெறும். இந்த சுபதினத்தில், இல்லத்தரசிகள் மசாலா அரைக்கும் சிரமமே இல்லாமல், மிக எளிமையாகவும் அதே சமயம் அம்புட்டு ருசியாகவும் செய்யக்கூடிய ஒரு அட்டகாசமான மட்டன் குழம்பு செய்முறையை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- மட்டன் - அரை கிலோ (500g)
- நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- பட்டை - 2, கிராம்பு - 4, ஏலக்காய் - 4
- சோம்பு - அரை டீஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- தக்காளி - 3 (நீளவாக்கில் நறுக்கியது)
- மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (நல்ல நிறத்திற்காக)
- மல்லித்தூள் (தனியாத் தூள்) - 1 டீஸ்பூன்
- மட்டன் மசாலா தூள் - 3 ஸ்பூன்
- கொத்தமல்லி தழை - சிறிதளவு
- உப்பு மற்றும் தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலாவதாக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிய விடவும். சோம்பு பொரிந்தவுடன், நறுக்கி வைத்துள்ள 3 பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும், 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தொடர்ந்து, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்றாக மசிந்து சுருண்டு வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
தக்காளி வதங்கிய பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், 1 டீஸ்பூன் மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை நீங்கும் வரை ஒரு நிமிடம் வதக்கவும். (விருப்பப்பட்டால் இந்தத் தருணத்தில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்துக்கொள்ளலாம், இது மட்டனை மேலும் மென்மையாக்கும்).
இப்போது, நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள அரை கிலோ மட்டனை குக்கரில் சேர்த்து, மசாலாக்களுடன் நன்றாகக் கலந்து விடவும். மட்டனில் இருந்து தானாகவே தண்ணீர் பிரிந்து வரும் வரை சுமார் 5 நிமிடங்களுக்கு நன்றாக வதக்க வேண்டும். பின்னர், 3 ஸ்பூன் மட்டன் மசாலா தூள் சேர்த்து கிளறி, குழம்பிற்குத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலந்து விடவும்.
உப்பு மற்றும் காரம் சரிபார்த்த பின்பு, குக்கரை மூடி விசிலிடவும். மட்டன் நன்றாக வேகுவதற்காக உங்கள் குக்கரின் அளவிற்கு ஏற்ப 5 விசில் விட்டு இறக்கவும். பிரஷர் முற்றிலும் குறைந்ததும் குக்கர் மூடியைத் திறந்தால், எண்ணெய் பிரிந்து மட்டன் பஞ்சு போல் வெந்திருப்பது தெரியும்.
மீண்டும் ஸ்டவ்வை ஆன் செய்து, குழம்பை மிதமான தீயில் (Medium Flame) 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். குழம்பு நல்ல கெட்டியான பக்குவத்திற்கு வந்ததும், கமகமக்கும் வாசனையுடன் எண்ணெய் மிதக்கத் தொடங்கும். இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கினால், நாவில் எச்சில் ஊறும் சுவையான மட்டன் குழம்பு தயார்!
சுவை மொட்டுக்களுக்கான டிப்ஸ்:
இந்த இன்ஸ்டன்ட் மட்டன் குழம்பு சுடச்சுட சாதம், சப்பாத்தி, தோசை, பரோட்டா என அனைத்து உணவுகளுடனும் சேர்த்து சாப்பிட அற்புதாமாக இருக்கும். இந்த பக்ரீத் பண்டிகைக்கு உங்கள் வீட்டில் இந்த எளிய முறையை முயற்சி செய்து அசத்துங்கள்!





