திங்கள், 25 மே, 2026

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை - அதிரடி தீர்ப்பு

 

Vilathikulam girl student murder case verdict Thoothukudi POCSO court judgement Dharma Muniswaran arrest

Vilathikulam girl student murder case verdict

தூத்துக்குடி மாவட்டம் வேதனத்தம் பகுதியில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் கூடிய இரட்டைத் தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா இன்று (25 மே 2026) தீர்ப்பளித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய 12-ஆம் வகுப்பு (பிளஸ்-2) மாணவி, கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி இரவு நேரத்தில் வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது திடீரென காணாமல் போனார்.

பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, எல்லைப் பிரச்சினை காரணமாக வழக்கை பதிவு செய்ய போலீசார் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, தேடுதல் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டது. அடுத்த நாள் மார்ச் 11-ஆம் தேதி மதியம், வீட்டின் அருகே சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில், அம்மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது கண்டறியப்பட்டது.

இந்த கொடூர சம்பவம் குறித்து தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டங்களும், சாலை மறியல்களும் வெடித்தன. குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சம்பவம் நடந்த காட்டுப்பகுதியில் உள்ள காற்றாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் பைக்கில் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

அந்த பைக்கின் பதிவெண்ணை வைத்து நடத்திய விசாரணையில், அது திருடப்பட்ட பைக் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, செல்போன் சிக்னல்கள், டிஎன்ஏ (DNA) பரிசோதனைகள் மற்றும் தீவிர அறிவியல் பூர்வ விசாரணையின் அடிப்படையில், குற்றவாளியான ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (வயது 38) என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

குற்றவாளியின் பகீர் பின்னணி:

கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் ஒரு தொடர் குற்றவாளி. ஏற்கனவே 2020-ஆம் ஆண்டு எட்டயபுரம் அருகே மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், இவருக்கு 2022-இல் மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, கடந்த 2025 டிசம்பர் மாதம்தான் இவர் பிணையில் வெளியே வந்திருந்தார். பிணையில் வந்து நீதிமன்றத்தில் தினசரி கையெழுத்திட்டு வந்த நிலையிலும், மீண்டும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் அம்பலமானது.

இந்த வழக்கின் தீவிரத்தை உணர்ந்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை உடனடியாக விளாத்திகுளம் டிஎஸ்பி நேரடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. மேலும், புகார் அளிக்கத் தாமதம் செய்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் குலத்தூர் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் (Suspension) செய்து உத்தரவிட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு அரசு தரப்பில் ரூ.10 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் ஆணையிட்டது.

போக்சோ சட்ட விதிகளின்படி, சம்பவம் நடந்த 20 நாட்களுக்குள் காவல் துறையினர் நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். சாட்சிகள், தடய அறிவியல் அறிக்கைகள் மற்றும் இருதரப்பு வாதங்களும் மிக விரைவாக நடத்தி முடிக்கப்பட்டன.

சம்பவம் நடந்து இன்றுடன் 76 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் குற்றவாளி தர்ம முனீஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு இரட்டைத் தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/vilathikulam-girl-student-murder-case-verdict-thoothukudi-pocso-court-judgement-dharma-muniswaran-arrest-11871175