23 5 2026
/indian-express-tamil/media/media_files/2026/05/23/petrol-2026-05-23-07-36-39.jpg)
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் எரிசக்தி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் தாக்கத்தால், அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இந்த வரிசையில், சனிக்கிழமையான இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 91 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த பத்து நாட்களுக்குள் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மூன்றாவது விலை உயர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் டெல்லியில் இந்த விலை உயர்வு நேரடியாகப் எதிரொலித்துள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87 பைசா உயர்த்தப்பட்டு, 98 ரூபாய் 64 பைசாவிலிருந்து 99 ரூபாய் 51 பைசாவாக அதிகரித்துள்ளது. அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு 91 பைசா உயர்த்தப்பட்டு, 91 ரூபாய் 58 பைசாவிலிருந்து 92 ரூபாய் 49 பைசாவாக உயர்ந்துள்ளது.
கடந்த மே 15-ஆம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வு முறையை நடைமுறைப்படுத்தத் தொடங்கின. அன்றைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மே 19 அன்று இரண்டாவது முறையாக 90 பைசா உயர்த்தப்பட்டது. தற்போது சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த மூன்றாவது உயர்வையும் சேர்த்து, கடந்த பத்து நாட்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு கிட்டத்தட்ட 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/petrol-and-diesel-prices-hiked-for-third-time-in-10-days-up-by-nearly-5litre-11864517





