திங்கள், 25 மே, 2026

பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியா? சூலூரில் வெடித்த மக்களின் கோபம்;

 

Screenshot 2026-05-25 135714

கோவை மாவட்டம் சூலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கண்ணம்பாளையம் பகுதியில் சிறுமிக்கு நேர்ந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சூலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு குற்றவாளிகளுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். “பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்”, “சிறுமிக்கு உடனடி நீதி கிடைக்க வேண்டும்”, “குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்ற கோஷங்கள் முழங்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய கட்சியினர், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் காவல்துறை மற்றும் அரசு தரப்பில் கடுமையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தல், குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் அ. சக்திவேல் முருகன் தலைமை தாங்கினார். இ. பிரபாகரன் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார். சூலூர் மண்டல மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரமோகன் கலந்து கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு என்பது அரசியல் கட்சிகளைத் தாண்டிய சமூகப் பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.

மேலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களான ஸ்ரீநாத், கார்த்திகா, நர்மதா, சீதாலட்சுமி, பர்கர் ஜமேஷ், கலாமணி, பேரறிவாளன், கோத்தகிரி தமிழவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களும் பெருமளவில் திரண்டு, சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். ஆர்ப்பாட்டம் முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்றதுடன், சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு நிறைவுபெற்றது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/massive-protest-by-naam-tamilar-katchi-in-sulur-demanding-justice-for-minor-girl-abuse-case-11871824