/indian-express-tamil/media/media_files/2026/05/12/os-maniyan-2026-05-12-21-07-41.jpg)
தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க.வில் மீண்டும் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது.எடப்பாடி பழனிசாமி தலைமைக்கும், சி.வி.சண்முகம்-எஸ்.பி. வேலுமணி குழுவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி வரை நீண்டுள்ளது. இன்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்களான ஓ.எஸ். மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சட்டமன்ற சபாநாயகரைச் சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், அ.தி.மு.க.வின் 47 எம்.எல்.ஏ-க்களும் கையெழுத்திட்ட கடிதத்தைச் சபாநாயகரிடம் அளித்து உள்ளோம். அதனடிப்படையில் எடப்பாடி பழனிசாமிதான் இப்போதும் அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவர். அ.தி.மு.க. கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி செயல்படுவார். நாளை நடைபெறும் த.வெ.க அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், கட்சியின் உத்தரவை ஏற்று த.வெ.க-வுக்கு எதிராகவே அ.தி.மு.க வாக்களிக்கும். தி.மு.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி பேசிக் கொண்டிருப்பதாக சி.வி. சண்முகம் கூறிய குற்றச்சாட்டை ஓ.எஸ். மணியன் வன்மையாக மறுத்தார்.
அ.தி.மு.கவும் தி.மு.க.வும் என்றும் எதிரெதிர் துருவங்கள். சி.வி. சண்முகம் தனது சுய லாபத்திற்காக, எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுக்க அவதூறுகளைப் பரப்புகிறார். அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையில் அவர் இவ்வாறு பேசி வருகிறார். அ.தி.மு.க.வின் பிளவை முதல்வர் விஜய் ஆதரிக்க மாட்டார் என நம்புகிறோம். கட்சி கொறடாவின் உத்தரவை மீறி, த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் எம்.எல்.ஏ-க்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார். அ.தி.மு.க பொதுச்செயலாளருக்கு மட்டுமே கட்சியின் விதிகள் குறித்து பேச அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வில் அவ்வப்போது குழப்பங்கள் நீடித்து வந்தன. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தற்போது தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்ற புள்ளியில் கட்சி மீண்டும் 2 அணிகளாகப் பிரிந்துள்ளது. ஒருபுறம் வேலுமணி - சி.வி. சண்முகம் தரப்பு 30 எம்.எல்.ஏ-க்களுடன் விஜய்யை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். மறுபுறம் எடப்பாடி பழனிசாமி தரப்பு 47 எம்.எல்.ஏ-க்கள் தன்பக்கம் இருப்பதாகக் கூறி எதிராக வாக்களிக்கத் தயாராகி வருகிறது. நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு, த.வெ.க அரசின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது மட்டுமல்லாமல், அ.தி.மு.க.வின் அதிகாரப் போட்டியிலும் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-vs-tvk-we-will-vote-against-cm-vijays-govt-declares-eps-faction-legal-action-if-they-support-tvk-in-trust-vote-11828082





