source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-vs-pm-modi-west-asia-crisis-india-impact-11823033
/indian-express-tamil/media/media_files/2026/05/11/rahul-gandhi-vs-pm-modi-west-asia-crisis-india-impact-2026-05-11-15-27-03.jpg)
Rahul Gandhi vs PM Modi | West Asia crisis India impact
மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள, பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைக்கவும், அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கவும் மக்கள் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். பிரதமரின் இந்த அறிவுரைகள் மத்திய அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சாடியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடு செல்லாதீர்கள், பெட்ரோல் பயன்பாட்டைக் குறைங்கள், சமையல் எண்ணெய் மற்றும் உரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யுங்கள் மற்றும் வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள் (Work From Home) என மக்களிடம் பிரதமர் தியாகங்களைக் கோருகிறார். இவை வெறும் ஆலோசனைகள் அல்ல; இவை அரசின் தோல்விக்கான ஆதாரங்கள்.
கடந்த 12 ஆண்டுகளில் நாட்டை இவ்வளவு மோசமான நிலைக்கு பிரதமர் கொண்டு வந்துள்ளார். மக்கள் எதை வாங்க வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என்பதைக்கூட அரசே தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்காகவே அரசாங்கம் மக்களின் மீது பழியைப் போடுகிறது. நாட்டை நடத்துவது என்பது இனி ஒரு 'சமரசமான பிரதமரால்' (Compromised PM) முடியாத காரியம்" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி அமெரிக்காவின் அழுத்தத்தில் இருப்பதாகக் கூறினார்.
"எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein files) மற்றும் அமெரிக்காவில் கௌதம் அதானிக்கு எதிரான வழக்குகள் காரணமாகவே பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கப்பட்டு, இந்த வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்" என்று அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இது குறித்துக் கூறுகையில், "தேர்தல் முடிந்தவுடன் அரசாங்கத்திற்கு 'நெருக்கடி' ஞாபகம் வந்துவிட்டது. உண்மையில் நாட்டிற்கு இருக்கும் ஒரே நெருக்கடி பாஜகதான். கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒரு நாடால் எப்படி 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடியின் அறிவுரைகள் என்ன?
ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உலகளாவிய இடையூறுகளைச் சமாளிக்க மக்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்:
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்.
மின்சார வாகனங்களுக்கு (EV) முன்னுரிமை கொடுங்கள்.
ஒரு வருடத்திற்குத் தங்கம் வாங்குவதையும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களையும் தவிர்க்கவும்.
கொரோனா காலத்தைப் போல 'வொர்க் ஃப்ரம் ஹோம்' மற்றும் மெய்நிகர் கூட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துங்கள்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளை விடவும், முஸ்லிம் லீக்கை விடவும் தீவிரமான நிலையை எடுத்துள்ளதாகவும், அக்கட்சியை 'எம்.எம்.சி' (முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட் காங்கிரஸ்) என்றும் விமர்சித்தார்.





