செவ்வாய், 12 மே, 2026

சிலிண்டர் டெலிவரி மெசேஜ் வருதா? ஒரு நிமிஷம் நில்லுங்க.. மொத்த பேங்க் பேலன்ஸும் காலியாக வாய்ப்பிருக்கு - உஷார்!

 

source https://tamil.indianexpress.com/tamilnadu/lpg-cylinder-delivery-dac-otp-scam-alert-protect-bank-account-11824996


lpg supply 2

சிலிண்டர் விநியோகத்தை உறுதிப்படுத்த எரிவாயு நிறுவனங்கள் அனுப்பும் ஓ.டி.பி (OTP) எண்களைப் போல போலியான குறுஞ்செய்திகளை உருவாக்கி, மோசடியாளர்கள் கைவரிசை காட்டுகின்றனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டி.ஏ.சி (DAC) பாதுகாப்பு நடைமுறையைப் பயன்படுத்தி, பொதுமக்களின் வங்கிப் பணத்தைச் சுருட்டும் புதிய வகை சைபர் மோசடி அரங்கேறி வருகிறது. சிலிண்டர் கையில் கிடைப்பதற்கு முன்பே ஓ.டி.பி (OTP) எண்களைப் பகிரக் கோரும் மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்க, எரிவாயு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள முக்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இதோ.

பொதுவாக, முன்பதிவு செய்த சிலிண்டர் வீட்டிற்கு வரும்போது அதனை உறுதி செய்ய நுகர்வோரின் மொபைல் எண்ணிற்கு ஒரு ரகசிய குறியீடு வரும். இதனைப் பயன்படுத்தும் கும்பல், சிலிண்டர் விநியோகஸ்தர்கள் போலப் பேசி அல்லது போலியான இணைய முகவரிகளை அனுப்பி, அந்த குறியீட்டைப் பகிருமாறு நுகர்வோரை வற்புறுத்துகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், உண்மையான செய்தி என நம்பி மக்கள் அந்த லிங்க்கை கிளிக் செய்யும்போதோ அல்லது ரகசிய எண்ணைப் பகிரும்போதோ, அவர்களது வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஹெச்பி, இண்டேன் மற்றும் பாரத் கேஸ் போன்ற முன்னனி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளன. குறிப்பாக, சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து, சிலிண்டரை உங்களிடம் ஒப்படைக்கும் போது மட்டுமே அந்த டிஏசி குறியீட்டை அவரிடம் தெரிவிக்க வேண்டும். அதற்கு முன்னதாகவோ அல்லது தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ்அப் வழியாகவோ ஓ.டி.பி எண்களைக் கேட்பது அதிகாரப்பூர்வமானது அல்ல என்பதை நிறுவனங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

மேலும், எச்.பி கேஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை 'VM-HPGASc-S' என்ற அடையாளத்தில் வரும் செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய வகையில் வரும் அழைப்புகள் அல்லது அவசரப்படுத்தும் குறுஞ்செய்திகளுக்குப் பதில் அளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தட்டுப்பாடு நிலவும் சூழலில் மக்கள் அவசரத்தில் எடுக்கும் முடிவுகளை மோசடியாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதால், எல்.பி.ஜி சிலிண்டர் தொடர்பான விவகாரங்களில் மிகுந்த நிதானத்துடனும் பாதுகாப்புடனும் செயல்படுவது அவசியம். உங்களின் விழிப்புணர்வு மட்டுமே உழைத்துச் சேர்த்த பணத்தைச் சைபர் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாக்கும்.