விஜய் தலைமையிலான த.வெ.க, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்கள் பிடித்த நிலையில் காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகள், வி.சி.க, இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது, ”மீண்டும் உடனடியாக தமிழ்நாடு ஒரு தேர்தலை சந்திக்க தயாராக இல்லை என்பதால் த.வெ.க-விற்கு ஆதரவு அளித்தோம்.
கொல்லைப்புற வழியாக பா.ஜ.க ஆட்சி நடத்தும் வகையில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்துவிடக் கூடாது. மக்களுடைய தீர்ப்பு என்பது தி.மு.க அணி, அ.தி.மு.க அணி இரண்டிற்கும் எதிராக தான் இருந்திருக்கிறது. அதே நேரத்தில் எந்த ஒரு கட்சிக்கும், எந்த ஒரு அணிக்கும் அருதி பெரும்பான்மை இல்லை என்ற நிலையில் ஒரு தனிப் பெரும் கட்சி என்ற வகையில் 108 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது த.வெ.க தான். ஆகவே ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு தான் இருக்கிறது.
அந்த அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்பதற்காக த.வெ.க-விற்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக இடதுசாரி கட்சிகள் மற்றும் வி.சி.க அறிவித்திருக்கிறது. அந்த அடிப்படையில் ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதோ, அவர்களின் ஆதரவை தொடர்ந்து பெறுவது என்பது மக்களின் தீர்ப்பிற்கு எதிரானது.
ஏற்கனவே அ.தி.மு.க, தி.மு.க 2 அணிக்கும் எதிராக தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அத்தகைய அணியின் ஆதரவை பெற்று த.வெ.க ஆட்சியில் தொடர்வது என்பது மக்களுடைய தீர்ப்பிற்கு விரோதமாக அமையும். அ.தி.மு.க-வின் ஒரு குரூப் ஆதரவை பெற்றாலோ, அ.தி.மு.க-வுடன் சேர்ந்து கொண்டு ஆட்சி அமைக்கும் முடிவிற்கு த.வெ.க செல்லுமானால் எங்களின் முடிவை மறு பரிசீலனை செய்வோம்” என்றார்.
19 05 2026
source https://tamil.indianexpress.com/tamilnadu/if-vijay-receives-the-support-of-an-admk-we-will-reconsider-our-support-shanmugam-says-11852501





