/indian-express-tamil/media/media_files/2026/05/27/tamil-thai-vazhathu-controversy-sri-lankan-navy-fishermen-arrest-2026-05-27-20-04-03.jpg)
CM Vijay PM Modi meeting | Tamil Thai Vazhathu controversy
அரசு நிகழ்ச்சிகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடுவது தொடர்பாக, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில், அதற்கு பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சி. ஜோசப் விஜய் புதன்கிழமை (27.05.2026) புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக நலன் சார்ந்த 4 முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார்.
அந்த மனுவின் 2-வது கோரிக்கையாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் குறிப்பாணை காரணமாக சில அரசு நிகழ்ச்சிகளில் 'தேசியப் பாடல்' முதலாவதாகப் பாடப்படுவதைச் சுட்டிக்காட்டி, மாநில வாழ்த்துப் பாடலான 'தமிழ்த்தாய் வாழ்த்தை' அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே பாடுவதற்கு மத்திய அரசு உரிய "தெளிவுரை" (Clarification) வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் கோரியிருந்தார்.
"சுதந்திரம் என்ன சுக்கா மிளகா?" - தி.மு.க-வின் காரசார சாடல்
முதலமைச்சரின் இந்தக் கோரிக்கைக்கு, தி.மு.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான ம. அப்பாவு தனது எக்ஸ் (X) பக்கத்தில் கடுமையான கண்டனப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில்,
“மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில் சில நீக்கங்களைச் செய்து தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இசைக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் 23.11.1970-ல் அரசாணை வெளியிடபட்டது. தொடர்ந்து வந்த எல்லா முதல்வர்களும் அதனை நடைமுறைப்படுத்திய நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசாணையை பிறப்பித்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இன்று அந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் இசைக்க அனுமதி தாருங்கள் என்று மாண்புமிகு பிரதமரிடம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது.
இதைப் பார்க்கும்போது பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய, "அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே" என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
சுக்கையும் மிளகையும் யாரும் யாருக்கும் கொடுக்கலாம் வாங்கலாம். ஆனால் சுதந்திரத்தை கொடுக்கவும் முடியாது வாங்கவும் கூடாது, அது நமது உரிமை என்பதே அதன் பொருள்.
இன்று தமிழக அரசுக்கு இருக்கின்ற உரிமையை பயன்படுத்த பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் அனுமதி கேட்டது மாநில உரிமையை அடமானம் வைக்கும் செயல்.. “ என்று அப்பாவு விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, அவருக்கும் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-விற்கும் இடையே வெடித்துள்ள இந்த "தமிழ்த்தாய் வாழ்த்து" விவகாரம், தமிழக அரசியல் களத்தில் மாநில சுயாட்சி குறித்த விவாதங்களை மீண்டும் சூடாக்கியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-vijay-pm-modi-meeting-mekedatu-dam-issue-tamil-thai-vazhathu-controversy-sri-lankan-navy-fishermen-arrest-11880996





