எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிருப்தி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் குழு, த.வெ.க-வுக்கு ஆதரவாக வாக்களிக்க சபாநாயகர் அனுமதி வழங்கியிருப்பது தமிழ்நாடு சட்டமன்ற விதிகளை முற்றிலும் மீறும் செயலாகும் என தி.மு.க எம்.பி.யும், வழக்கறிஞருமான பி. வில்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 144 வாக்குகள் பெற்றதாக கூறப்படுவது சட்டப்படி தவறான கூற்றாகும். 118 (144-26) என்பது மட்டுமே சரி. (25 அ.இ.அ.தி.மு.க அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு அ.ம.மு.க அதிருப்தி சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு ) சட்டமன்றத்தில் உரையாற்றிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும், தங்களது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, அமைச்சர் பதவிகள் மற்றும் வாரியப் பதவிகள் தருவதாகக் கூறி த.வெ.க-வினர் அணுகியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் தமது அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் பத்தாவது அட்டவணையின் பிரிவு 2(b)-ன் கீழ் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு ஒரு தெளிவான ஆணையாக கருதப்படுகிறது. ஊடகச் செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இது அவர் தரப்பிற்கு ஒரு வலுவான ஆதாரமாக உள்ளது.
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எடப்பாடி பழனிசாமி உரையாற்றி முடித்த பிறகு, சட்டப்பேரவைத் தலைவர் அ.தி.மு.க-வின் அதிருப்திக் குழுவைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணியை பேசுவதற்கு அனுமதித்துள்ளார். மேலும், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அந்த அதிருப்தி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் குழு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவும் அவர் அனுமதி வழங்கியுள்ளார். இது தமிழ்நாடு சட்டமன்ற விதிகளை முற்றிலும் மீறும் செயலாகும். மேலும், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தமது கட்சியின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரான காமராஜ், குதிரை பேரத்தில் ஈர்க்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தே.மு.தி.க வைச் சார்ந்த பிரேமலதா விஜய்காந்த் உள்ளிட்ட எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியின் இந்த குதிரை பேரத்திற்கு எதிராகத் தங்கள் கடும் கண்டனங்களை சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளனர். ஆளும் கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை. பிரதான எதிர்கட்சியினர் மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் உள்ளிட்ட அனைவரும் ஒண்றினைந்து, எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களும், அ.ம.மு.க-வின் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் கட்சிப் பொதுச்செயலாளர்களின் உத்தரவுகளைப் பின்பற்றாமலும், தார்மீக அடிப்படையில் இல்லாமலும் தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவும் பணப் பயன்களுக்காகவும் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் சட்டமன்ற விதிகளை முறையாகப் பின்பற்றியிருக்க வேண்டும்.. இவ்வளவு அவசரமாக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியிருக்கக்கூடாது என்பதே சரியான நிலைப்பாடாகும்.
குற்றச்சாட்டுகளை முன்வைத்த உறுப்பினர்களுக்கு அவற்றை நிரூபிக்க சபாநாயகர் போதிய கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். மேலும், கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்படும் அந்த அதிருப்தியாளர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதித்திருக்கக் கூடாது என்பதே சட்ட ரீதியான வாதமாகும்.
சட்டப்பேரவைத் தலைவர் இந்த விதியைக் கண்டிப்பாகப் பின்பற்றியிருக்க வேண்டும்.. சட்டப்பேரவைத் தலைவர் அவர்களின் இந்த முடிவும், அதிருப்தி உறுப்பினர்களின் வாக்குகளும் முறையான ஆதாரங்களுடன் ஆளுநரிடமோ அல்லது நீதிமன்றத்திலோ முன்வைக்கப்பட்டால், அந்த 26 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டு, அவை செல்லாததாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
சட்டப்பேரவைத் தலைவர் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைக் கருத்தில் கொண்டு, குதிரை பேரம் குறித்த புகார்களை விசாரிக்க ஒரு குழுவை நியமித்திருக்க வேண்டும். முதலமைச்சர் ஜேசப் விஜய் சட்டமன்ற அவையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்கவோ அல்லது அவற்றுக்கு விளக்கம் அளிக்கவோ முன்வராதது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது.
இராஜாராம் பால் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, இத்தகைய விவகாரங்களை விசாரிக்க ஒரு குழுவை அமைப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/speaker-rule-violation-26-mlas-face-disqualification-says-dmk-mp-wilson-11840175





