புதன், 13 மே, 2026

மத்திய அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு ரூ.500 கோடியை உடனே வழங்குக;

 தமிழக முதலமைச்சர் விஜய்யை விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்து, மத்திய அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கான ரூ.500 கோடியை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இது குறித்த விபரம் வருமாறு:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

தமிழக முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

தமிழக அரசின் நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் வாங்கப்படும் நெல்லுக்கு மூன்று நாட்களில் பணம் வழங்கப்படுகிறது ஆனால் மத்திய அரசின் நேஷனல் கன்ஸ்யூமர் கோப்பரட்டிவ் ஃபெடரேஷன் சார்பில் திருநெல்வேலி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 20- 2 -2026 முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ரூ.500 கோடி அளவுக்கு நெல் கொள்முதல் செய்துவிட்டு இதுவரை விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படவில்லை.
 
அந்தத் தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், மாநில அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். மழைக்காலங்களில் 
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் புதிதாக செட்டுகள் அல்லது கூடாரங்கள் அமைக்க வேண்டும். மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

மனு அளித்ததை தொடர்ந்து உடனே முதலமைச்சர் வேளாண் துறை செயலர் பழனிச்சாமியை அழைத்து விவரம் கேட்டார். அப்போது அவர் மத்திய அரசு ரூபாய் 391 கோடி மட்டுமே வழங்க வேண்டியுள்ளது. இன்னும் 15 நாட்களில் அந்த தொகை விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தமிழக முதல்வர் உடனான சந்திப்பின்போது துணைத் தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, ஜோதி முருகன், மாநில பொதுச் செயலாளர் ஏழுமலை, செங்கல்பட்டு சண்முகம் உள்ளிட்ட விவசாயிகள் உடன் இருந்தனர். 

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/farmers-leader-ayyakannu-meets-cm-vijay-regarding-paddy-procurement-payment-11828749