நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்திற்கு தனது இரண்டாவது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மே 16, 17 தேதிகளில் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது, ஹேக் நகரில் உள்ள 'ஹவுஸ் டென் போஷ்' அரச மாளிகையில் நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மன்னர் தம்பதியினர் பிரதமர் மோடிக்குச் சிறப்பு மதிய விருந்தளித்து கௌரவித்தனர். இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் ஆகிய இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு மற்றும் பிரதிநிதிகள் அளவிலான விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தகத் தொடர்புகள் மற்றும் ஆழமான மக்கள் உறவுகளை நினைவு கூர்ந்த தலைவர்கள், இந்த பன்முக உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் உலகளாவிய இணக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியா-நெதர்லாந்து உறவை ஒரு 'உத்திசார் கூட்டாண்மை' ஆக உயர்த்த இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். இதன் கீழ் அரசியல், வர்த்தகம், பாதுகாப்பு, விண்வெளி, குவாண்டம் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் வழக்கமான மற்றும் கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்பை உறுதி செய்வதற்கான கூட்டு வழிகாட்டி வரைபடம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இருதரப்பு முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், மிகவும் லட்சியமான 'இந்தியா-நெதர்லாந்து பசுமை ஹைட்ரஜன் மேம்பாட்டு வழிகாட்டி வரைபடம்' முறைப்படி தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பசுமை ஆற்றல் இலக்குகளுக்கும், தூய்மையான உலகளாவிய எரிசக்தி மாற்றத்திற்கும் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளின் ஆயுதப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, கூட்டு மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் மூலம் ராணுவ உபகரணங்களைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு தொழில்துறை வழிகாட்டி வரைபடத்தை உருவாக்குவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை இரு தலைவர்களும் மனதார வரவேற்றனர். உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், உலகின் இரண்டாவது மற்றும் நான்காவது பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச சட்டங்களையும், கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தையும் நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் ஜெட்டன், இந்தியா முன்னெடுத்துள்ள 'இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள் முன்முயற்சியில்' நெதர்லாந்து இணைவதாகவும், அதன் ஒரு முக்கியத் தூணுக்கு ஜெர்மனியுடன் இணைந்து கூட்டுத் தலைமை தாங்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
உலக அளவில் அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் தங்களின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தின. கடந்த 2025 ஏப்ரலில் ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்த நெதர்லாந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் பக்கம் எப்போதும் நிற்பதாக உறுதியளித்தது.
தொழில்நுட்பத் துறையில் மிக முக்கிய மைல்கல்லாக, செமிகண்டக்டர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, நெதர்லாந்தின் ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் ட்வென்டே பல்கலைக்கழகம் ஆகியவை இந்தியாவின் ஆறு முன்னணி ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செமிகண்டக்டர் துறையில் ஆராய்ச்சி மற்றும் திறமையாளர்களை மேம்படுத்துவதற்கான 'அறிவுப் பாலத்தை' உருவாக்கவுள்ளன. இதற்கு ஏஎஸ்எம்எல், டாடா, என்எக்ஸ்பி போன்ற முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் தொழில்துறைப் பங்களிப்பை வழங்குகின்றன. நீர் மேலாண்மையைப் பொறுத்தவரை, புதுடெல்லி ஐ.ஐ.டி-யில் 'நீர் மேலாண்மைக்கான சிறந்த மையம்' அமைக்கப்படவுள்ளது.
விவசாயத் துறையில், பெங்களூருவில் பால் பண்ணை பயிற்சிக்கான பிரத்யேக மையமும், தூய்மையான தாவர மையங்களும் அமைக்கப்படவுள்ளன. மேலும், நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் இருந்த சோழர் காலத்து வரலாற்றுச் சிறப்புமிக்க செப்புப் பட்டயங்கள் இந்திய அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டதை இரு தலைவர்களும் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.source https://tamil.indianexpress.com/india/pm-modi-x-post-chola-era-copper-plates-returned-from-leiden-university-netherlands-11844301





