செவ்வாய், 12 மே, 2026

நீட் 2026: வினாத் தாள் கசிந்ததா? தேர்வுக்கு முன்பே வெளியான 120 கேள்விகள்? போலீசார் விசாரணை

 

NEET-UG

நீட் 2026: வினாத் தாள் கசிந்ததா? தேர்வுக்கு முன்பே வெளியான 120 கேள்விகள்? போலீசார் விசாரணை

நாடு முழுவதும் மே 3-ம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் 2026 தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து, ராஜஸ்தான் மாநில போலீசாரின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOG) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய SOG கூடுதல் டிஜிபி விஷால் பன்சால் கூறியதாவது; நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. 410 வினாக்கள் அடங்கிய ஒரு 'கெஸ் பேப்பர்' குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். இந்த 410 வினாக்களில் சுமார் 120 வினாக்கள், குறிப்பாக வேதியியல் பாடத்தில் கேட்கப்பட்ட வினாக்கள், உண்மையான தேர்வு வினாத்தாளுடன் ஒத்துப்போவதாகக் கூறப்படுகிறது. 

இந்த பிடிஎஃப் கோப்பு தேர்வு நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே, சுமார் 1 மாதத்திற்கு முன்னரே மாணவர்களிடம் புழக்கத்தில் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது. சுமார் 150 பக்கங்கள் கொண்ட இந்த கோப்பு மாணவர்களின் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பகிரப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் எங்கிருந்து உருவானது என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. இது பொதுவெளியில் பரவலாகப் பகிரப்பட்டதால் அதன் மூலத்தைக் கண்டுபிடிப்பது சவாலான காரியம் என்று பன்சால் தெரிவித்தார்.

பொதுவாக வினாத்தாள் கசிவு என்பது மிகவும் ரகசியமாக நடக்கும். ஆனால், இந்த விவகாரத்தில் வினாக்கள் பொதுவெளியில் கசிந்துள்ளன. வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் பொதுவாக தேர்வுக்கு முந்தைய நாள் இரவு, தேர்வு நாள் காலை மாணவர்களைப் படிக்க வைப்பார்களே தவிர, இப்படி பொதுவெளியில் பகிர மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுதொடர்பாக டேராடூனைச் சேர்ந்த ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வினாத்தாள் கசிவு புகார்கள் குறித்து தேசிய தேர்வு முகமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேர்வு முறையின் நேர்மையைக் காப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விசாரணை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மே 7-ம் தேதி இரவு இது தொடர்பான புகார்கள் வந்த நிலையில், அடுத்த நாளே (மே 8) மத்திய விசாரணை அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.

தேர்வு நேர்மையாக நடந்ததாகத் தெரிவித்துள்ள தேசிய தேர்வு முகமை, பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதாகக் கூறியுள்ளது. வினாத் தாள்கள் GPS பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. தேர்வு அறைகளில் ஏ.ஐஒ (செயற்கை நுண்ணறிவு) உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மாணவர்களுக்கு பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் 5ஜி ஜாமர்கள் பயன்படுத்தப்பட்டன. விசாரணை முடிவில் உண்மைகள் வெளிவரும் என்றும், தகுதியுள்ள மாணவர்களின் உழைப்பு வீண் போகாது என்றும் தேசிய தேர்வு முகமை உறுதியளித்துள்ளது. கல்வி அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/education-jobs/120-of-410-questions-from-neet-ug-appeared-in-guess-paper-probe-begins-in-rajasthan-11824636