ஞாயிறு, 10 மே, 2026

ஆதரவா? 20 எம்.எல்.ஏ-க்களுடன் கட்சித் தாவல் தடை சட்டம்' பாயுமா?

 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய அரசு அமைப்பதில் நிலவி வந்த இழுபறியில் தற்போது மிகப்பெரிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற த.வெ.க தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போது த.வெ.க தலைவர் விஜய்க்கு 120 என்ற பலம் கிடைத்துள்ளது. 

விஜய் ஆட்சி அமைக்கும் பரபரப்பு ஒருபுறம் இருக்க, தமிழக அரசியல் களத்தில் அ.தி.மு.க. நகர்வுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெற்றி பெற்ற கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தனிப்பட்ட செயல்பாடுகள் கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளன.

எடப்பாடி பழனிசாமி தனது X தளத்தில் ஆட்சி அமைக்கப்போகும் கட்சிக்கு வாழ்த்துத் தெரிவித்து பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர் சி.வி.சண்முகம் தனது அலுவலகத்தில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். சுமார் 15 முதல் 20 எம்.எல்.ஏக்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, அண்மையில் அ.தி.மு.க.வில் இணைந்த லால்குடி எம்.எல்.ஏ லீமா ரோஸ் இதில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மயிலம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபடும் நோக்கில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த ராஜினாமா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவிக்கையில், அ.தி.மு.க.வின் ஒரு தரப்பு எம்.எல்.ஏக்கள் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்து ஆட்சி அமைக்க ஆர்வம் காட்டுவதாகக் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துப் பதிவு ஒருபுறம் இருக்க, மறுபுறம் எம்.எல்.ஏக்கள் கூடி ஆலோசனை நடத்துவது முரணாகத் தெரிகிறது. இது ஒரு செயற்கையான பெரும்பான்மையை உருவாக்கும் முயற்சியாகவோ அல்லது குதிரை பேரமாகவோ மாற வாய்ப்புள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார்.

சி.வி.சண்முகம் தலைமையில் ஒருகுழு தனியாகப் பிரிந்து சென்றால் அவர்கள் மீது 'கட்சித் தாவல் தடைச் சட்டம்' பாயுமா என்பது குறித்த விவாதமும் எழுந்துள்ளது. தராசு ஷியாம் இதுகுறித்து விளக்குகையில், தற்போது புதிய சபாநாயகர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், கொறடா உத்தரவு (Whip) மற்றும் தகுதி நீக்கம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. இறுதியில் இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கைகளுக்கே செல்லும் சூழல் உருவாகலாம். அதிமுக தலைமைக்கும், சி.வி.சண்முகம் தலைமையிலான இந்த குழுவிற்கும் இடையே நிலவும் இந்த அதிகாரப் போட்டி, வரும் நாட்களில் தமிழக அரசியலில் மேலும் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/anti-defection-law-vs-rebel-power-eps-wishes-but-cv-shanmugam-rebels-deep-split-in-admk-as-20-mlas-hold-separate-meet-11817474