திங்கள், 4 மே, 2026

தமிழகத்தில் மே 4-ல் தொடங்கும் அக்னி நட்சத்திரம்: 5 டிகிரி வரை வெப்பம் உயர வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

 

தமிழகத்தில் கோடை காலத்தின் உச்சகட்ட வெப்பமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4 தொடங்கி மே 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு நீடிக்க உள்ளது. ஏற்கனவே மாநிலத்தின் பல நகரங்களில் வெயில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வாட்டி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வருகிறது. வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் இளநீர், குளிர்பான கடைகளை நாடி வருகின்றனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். எனினும், மே 5 முதல் 7-ம் தேதி வரை வெப்பநிலை வழக்கமான அளவிலேயே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு சத்தீஸ்கர் முதல் குமரிக்கடல் வரை நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

மே 4 & 5-ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் (30-40 கி.மீ வேகம்) கூடிய கனமழை பெய்யக்கூடும். மே 6-ல் நீலகிரி, கோவை (மலைப்பகுதிகள்), தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. மே 7-ல் மதுரை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை நீடிக்கும். மே 8 & 9-ல் தென் மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12 நகரங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 108.86° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

சென்னை மீனம்பாக்கம் - 105.08 டிகிரி

கடலூர் - 100.94 டிகிரி

தர்மபுரி - 103.46 டிகிரி

ஈரோடு - 106.16 டிகிரி

கரூர் பரமத்தி - 104 டிகிரி

நாகப்பட்டினம் - 102.56 டிகிரி

நாமக்கல் - 101.3 டிகிரி

சேலம் - 102.2 டிகிரி

தஞ்சாவூர் - 100.4 டிகிரி

திருப்பத்தூர் - 103.46 டிகிரி

திருத்தணி - 107.96 டிகிரி

வேலூர் - 108.86 டிகிரி

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 3 காலை நிலவரப்படி அதிகபட்சமாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 10 செ.மீ மழையும், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/agni-natchathiram-starts-in-tamil-nadu-tomorrow-temperatures-set-to-rise-by-5-degrees-imd-predicts-rising-heat-and-heavy-rain-for-tamil-nadu-11795869