முடிவுக்கு வந்த 50 ஆண்டு இரு துருவ அரசியல் 5 5 2026
இதன்பிறகு கமல் ஹாசன் - ரஜினிகாந்த் இடையே போட்டித்தன்மை உருவானது. அதன்பிறகு கண்ட போட்டித் தன்மையில் விஜய் - அஜித் நிலைபெற்றனர். அவர்களுக்குப் பிறகு அந்த இடத்தை பிடிக்க போட்டிகள் நடந்தாலும், இன்னும் யாரும் பிடித்த பாடில்லை. சினிமா போல், தமிழக அரசியலும் 'இரு துருவ' சொல்லாடலுக்குள் நுழைந்தது. நாட்டையே ஆண்ட காங்கிரசுக்கு எதிராக அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் உருவாக்கியது. காங்கிரசின் ஆட்டத்தை அடக்கிய அக்கட்சி 1967-ல் ஆட்சியைப் பிடித்தது.
1969-ல் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வுக்கு எதிராக அக்கட்சியில் மையப் புள்ளியாக இருந்து சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த எம்.ஜி.ஆர், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். 1977-ல் ஆட்சியை கைப்பற்றி, 1987-ல் அவர் மறையும் வரை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தார். இதன்பிறகு அ.தி.மு.க-வில் குழப்பம் நீடித்தாலும், ஜெயலலிதா தலைமையில் வலுப்பெற்ற அ.தி.மு.க-வுக்கும் கருணாநிதியின் தி.மு.க-வுக்கும் இடையே தான் போட்டி நிலவியது. மூன்றாவதாக கட்சி உருவாகினாலும், மூன்றாவது அணி தோன்றினாலும் அவர்கள் இந்த இரு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதே கடந்த கால வரலாறு.
இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்று என யார் உள்ளே நுழைந்தாலும், இக்கட்சிகளின் நெருக்கடியில் சிக்கித் தவித்து, கூட்டணிக்குள் வந்து விடுவார்கள். 1977-க்குப் பிறகு இந்த இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சியைப் பிடித்துள்ளன. மாற்று என களம் கண்ட ராமதாஸ் முதல் விஜயகாந்த் வரை அனைவரும் கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள். சீமானைத் தவிர தற்போது களத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இவ்விரு கட்சியை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
ஆனால், இந்த தேர்தலில் அந்தக் கணக்கு தவிடு பொடியாகி இருக்கிறது. அது போன்ற கணக்குகளை தனது பிரமிக்க வைக்கும் வெற்றி மூலம் அடித்து நொறுக்கி இருக்கிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். அத்துடன் தமிழக அரசியல் திசையை மாற்றியும் இருக்கிறார். அவரின் இந்த வெற்றி 50 ஆண்டு இரு துருவ அரசியலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. இரு பெரும் துருவங்களாக விளங்கி அரியணைக்கு மாறி மாறி போட்டியிட்டு வந்த தி.மு.க - அ.தி.மு.க கட்சிகள் இம்முறை 2-ம், 3-ம் இடத்துக்கு போட்டியிடும் நிலையை உருவாக்கி இருக்கிறார் விஜய். அவரின் இந்த வெற்றியை வரலாறு பேசும் என்பதை விட கொண்டாடும் என்றால் மிகையாகது.





