தென்காசி அருகே மீனாட்சிபுரம் என்ற ஓர் சிறு கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் நடந்த ஓர் விசித்திரமான நிகழ்வை கேள்விப்பட்டு ஆச்சரியமடைந்தேன். 1981-ஆம் ஆண்டு, அங்கு வாழ்ந்த 300 குடும்பங்களில் 210 குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு ஒரே நேரத்தில் மதம் மாறினார்களாம்.. ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்த நிகழ்வு அது..
ஏன் மாறினார்கள்? ஒருவரிடம் கேட்டேன்.. ''எனக்கு அப்போது வயது 12. இஸ்லாமிய சமயத்திற்கு மாறுவதற்கு 2 நாள் முன்பாக, உயர் சாதியினர் இருவரை தலித் இனத்தைச் சேர்ந்த சிலர் கொலை செய்தார்கள். இந்த இரட்டைக்கொலை எங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஏற்கெனவே நாங்கள் உயர் சாதியினரால் கடுமையான அடக்குமுறைக்கு ஆட்பட்டிருந்தோம். இச்சம்பவத்தால் உயர்சாதியினர் எங்கள் மீதான அடக்குமுறையை மேலும் அதிகப்படுத்தக்கூடும் என பயந்தோம். மேலும் இந்த இரட்டைக்கொலையால் மீனாட்சிபுரத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, விசாரணை என்கிற பெயரில் ஒன்றுமறியாத தலித் மக்களை அடித்து துன்புறுத்தினர்.
ஆதிக்க சக்திகளின் ஒடுக்குதல்களிலிருந்து விடுதலை பெறவும், போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கவும் எங்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. உயர் சாதியினர் என்கிற அந்தஸ்தைப் பெற்றாலொழிய நாங்கள் இனி நிம்மதியாக வாழமுடியாது என்று நிலைமைக்கு தள்ளப்பட்டோம். காலம் தாழ்த்தாமல் உடனே கிட்டத்தட்ட 300 குடும்பங்கள் ஒரே நேரத்தில் இஸ்லாமிய சமயத்திற்கு மாறினோம்.
அதற்குப்பின் எங்கள் வாழ்க்கை முறையில் பல திருப்பங்கள் ஏற்பட்டு, விடிவுகாலம் பிறந்தது. ஏளனமாக சாதிப்பெயரை சொல்லி அழைத்தவர்கள் மரியாதையாக 'பாய்' என்றழைக்க தொடங்கினர். ஒரு நேரத்தில் தெருக்களில் நுழைய தடை விதித்தவர்கள், வீடுகளுக்குள் அழைத்து விருந்து கொடுத்தனர். பல சாதீய தீண்டாமைகள் படிப்படியாக குறைந்து, சமூக அந்தஸ்த்து காற்றை சுவாசித்தோம். இஸ்லாமியத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டதன் விளைவாக, சாதிப்பிரிவுகள் எங்களை விட்டு ஒழிந்து, சகோதரத்துவமும் சமத்துவமும் உண்டாகி, இப்போது மிகவும் கெளரவத்துடன் நடத்தப்பட்டு வருகிறோம்'' என்கிறார்..
படம்: மீனாட்சிபுரம் Masjid