வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வது எப்படி?


'தகவல் அறியும் உரிமை' சட்டத்தில் பெறப்பட்ட பதில்..!
கட்டாய திருமண பதிவு சட்டம்-2005, அமலுக்கு வந்துவிட்டதால், பள்ளிவாசல்களில் நடத்தப்படும் திருமணங்கள் அனைத்தையும் அரசாங்க கெஜட்டில் பதிவு செய்வது அவசியமாகிவிட்டது.
எளிதான முறையில் செய்ய முடிந்த இந்த திருமணப்பதிவு காரியம், மிகவும் கடினமான ஒரு வேலையாக மாற்றப்பட்டுவிட்டது.
சென்னை போன்ற இடங்களில் 'தலைமை காஜி' கடிதம் வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்தியதையடுத்து, காஜியின் கடிதம் பெறுவதில் தேவையற்ற அலைச்சல்களுக்கும், மன உளைச்சல்களுக்கும் ஆளாக வேண்டியதாகிவிட்டது.
இது சம்மந்தமான புகார்கள் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' தலைமைக்கு வந்தவண்ணம் இருந்தது.
இதையடுத்து, 'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்' திருமணப்பதிவு சம்மந்தமாக, பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்படி தேவையான ஆவணங்கள் :
1)மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் புகைப்படம்
2)புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் (ID Proof)
3)திருமணம் எங்கு நடத்தப்பட்டதோ அந்தப் பள்ளிவாசலின் பதிவேட்டு நகல்.
4)திருமணத்தை நடத்தி வைத்த ஜமாஅத் அல்லது முஹல்லாவின் கடிதம்
ஆகிய நான்கு ஆவணங்கள் மட்டும் கொடுத்தால் போதுமானது.
இவை 4 ஆவணங்களையும் கொடுத்தால், 22 நாட்களுக்குள் பதிவு செய்து கொடுக்க வேண்டியது பத்திரப்பதிவு அலுவலகத்தின் வேலையாகும்.
திருமணம் முடிந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில், 50 ரூபாய் அபராதம் செலுத்தி, மேலும் 60 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
திருமணத்தை பதிவு செய்ய யார்? யாரெல்லாம் அலுவலகத்திற்க்கு வரவேண்டும்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு:
மாப்பிள்ளை, அல்லது மாப்பிள்ளையின் தந்தை, அல்லது உறவினர் யாராவது ஒருவர் ஆவணங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம் என்று பதில் வந்து உள்ளது
ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
முஹல்லா தலைவர் வரவேண்டும்,
சாட்சி வரவேண்டும்,
ஹஜ்ரத் வரவேண்டும், என்றெல்லாம் இழுத்தடித்தது, சட்டத்துக்கு புறம்பானது என்பது ஆவணங்களின் அடிப்படையில் உறுதியாகி இருக்கிறது.
தகவல் உதவி : சேப்பாக்கம் அப்துல்லாஹ், TNTJ