அமெரிக்காவில் மேல்படிப்புக்காக சென்ற இந்த பெண்கள் தங்களின் கல்லூரி ஓய்வு நாட்களை பயனுள்ள வகையில் கழிக்க திட்டமிட்டனர். அதன்படி இவர்கள் ஒரு அமைப்பாக ஒருங்கிணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனமாக பரிணமித்து பல அரிய பணிகளை தங்கள் நாடான சவுதி அரேபியாவில் செய்து வருகின்றனர். இந்த அமைப்பின் பெயர் Joy of Youth (JOY).
இந்த அமைப்பின் முக்கிய பொறுப்பிலுள்ள வாலா அபு சபீன் கூறுகிறார் 'ஜெத்தாவில் விவாகரத்து பெற்று மூன்று குழந்தைகளோடு வறுமையில் வாடி வரும் ஒரு பெண்ணைப் பற்றி கேள்வி பட்டோம். எங்கள் குழு அங்கு விரைந்தது. 30 பேர் கொண்ட எங்கள் குழு எட்டு மணி நேரம் அந்த வீட்டில் தொடர்ந்து வேலை செய்தோம். உடைந்த மர சாமான்களை சரி செய்துகொடுத்தோம். முழு வீட்டிற்கும் பெயிண்ட் அடித்து புது பொலிவாக்கினோம். பாத் ரூம், சமையல் அறை என்று அனைத்து இடங்களையும் மிக சுத்தமாக துடைத்து அழகாக்கினோம்.
ஆறு பேர் கொண்ட அந்த குடும்பத்துக்கு இவற்றை எல்லாம் செய்து கொடுக்க பெரும் தொகை செலவழிக்க வேண்டி வரும். அந்த ஆறு பேரையும் அவர்களது சொந்தக் காரர்கள் வீட்டில் எட்டு மணி நேரம் தங்க வைத்தோம். அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு அவர்களை அழைத்து தங்களின் வீட்டை பார்க்க வைத்தோம்' என்கிறார். சயீத் அஸ்கர் என்ற பெண்மணியும் இதனை ஆமோதித்தார்.
சயீத் அஸ்கர் மேலும் கூறும் போது 'இது எங்களுக்கு பெரும் சவாலான பணி. குறைந்த நேரத்தில் ஒரு வீட்டையே மாற்றி அமைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதனை ஒரு சேலஞ்சாகவே எடுத்து செய்தோம். இது போன்று மேலும் பெரிய தொண்டுகளை செய்வதற்கு இது எங்களுக்கு ஒரு பயிற்சி களமாக இருந்தது.' என்கிறார்.
முஹம்மது அஃப்னான் கூறுகிறார் 'எட்டு மணி நேரத்தில் ஒரு வீட்டையே மாற்றி அமைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. குழுக்களாக பிரித்துக் கொண்டு இதனை செய்வோம். வேலை முடிந்தவுடன் அவர்களிடம் சாவியை கொடுக்கும் போது நன்றிப் பெருக்கால் அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகும். நாங்கள் பட்ட சிரமங்களுக்கு அதுவே கூலியாக எங்களுக்கு தெரியும். இது போன்று வசதியற்ற குடும்பங்களை தேடிச் சென்று உதவி வருகிறோம்' என்கிறார்.
சவுதி பெட்ரோல் பணத்திலேயே சிறு வயதிலிருந்து வாழ்ந்து பழக்கப்பட்ட இந்த பெண்மணிகள் வறியவர்க்கு உதவுவதை நோக்கமாக கொண்டு இந்த பணிகளை எடுத்துச் செய்கின்றனர். வறியவர்க்கு பொருளாலும் உடலாலும் உதவுவதை இஸ்லாம் வலியுறுத்துவதால் இவர்களின் பெற்றோரும் இந்த பெண்களை அனுமதிக்கின்றனர்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
10-08-2015
சவுதி கெஜட்
10-08-2015
காலை எட்டு மணியிலிருந்து இரவு 11 மணி வரை தொடர்ந்து டிவி சீரியல்களாக பார்த்து வரும் நம் தமிழக பெண்கள் இந்த சவுதி பெண்மணிகளைப் போல மாறுவார்களா?
டாஸ்மாக் கடைகளில் மது குடிக்க ஆண்களுக்கு போட்டியாக வரிசையில் நிற்பதை இனியாவது குறைத்துக் கொள்வார்களா?