வெளிநாட்டில் இருந்து இனி ரூ.25,000க்கு மேற்பட்ட ரொக்கம், எல்சிடி, எல்இடி, பிளாஸ்மா டிவிக்களை கொண்டு வந்தால், அவற்றை சுங்க உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட வேண்டுமென்ற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதே போல, சுங்க வரியில்லா சிகரெட் அளவு 50 சதவீதம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதித்துறை அமைச்சகம் சுங்க சரக்கு அறிவிப்பு ஒழுங்கு விதிமுறையில் சில திருத்தங்கள் செய்து நேற்று வெளியிட்டது. அதன்படி, விமானத்தில் இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளும் ரூ.25,000க்கு மேற்பட்ட கரன்சிகளையோ, எல்சிடி, எல்இடி, பிளாஸ்மா உள்ளிட்ட டிவி பொருட்களையோ கொண்டு வந்தால், அது பற்றி சுங்க உறுதிமொழி படிவத்தில் இனி குறிப்பிட வேண்டும். இதற்காக, சுங்க உறுதிமொழி படிவத்தில் புதிய வரிசை சேர்க்கப்பட உள்ளது.
தற்போதுள்ள படிவத்தில் வரி செலுத்திய பொருட்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் பற்றி மட்டுமே குறிப்பிடும் படியாக உள்ளது. ரூ.10,000க்கும் மேற்பட்ட பணம் கொண்டு வருகிறீர்களா, 5000 அமெரிக்க டாலருக்கு மேற்பட்ட தொகையை கொண்டு வருகிறீர்களா, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான தங்கத்தை கொண்டு வருகிறீர்களா, கறி, கறி தொடர்பான பொருட்கள், பால் பொருட்கள், தாவரம், விதைகள் கொண்டு வருகிறீர்களா உள்ளிட்ட கேள்விகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இவற்றில் தற்போது டிவி தொடர்பான கேள்விகளும் இடம் பெற உள்ளன. சுங்க வரி உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள பொருட்களுக்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
அதே போல, சீனா, நேபாளம், பூடான், மியான்மர் தவிர மற்ற நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி மற்றும் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் 10 ஆண்டாக தங்கியவர்களாக இருந்தால் ரூ.45,000 மதிப்பிலான சரக்குகளை எடுத்து வரலாம். முன்பு இந்த கட்டுப்பாடு ரூ.35,000 ஆக இருந்தது.
புதிய விதிமுறைப்படி, வரியில்லா சிகரெட்டின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, 200 சிகரெட், 50 சிகார் மற்றும் 250 கிராம் புகையிலை பொருட்களை வரியில்லாமல் எடுத்து வரலாம். இது 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இனி, 100 சிகரெட், 25 சிகார், 150 கிராம் புகையிலை பொருட்களுக்கு மட்டுமே வரி கிடையாது. அதற்கு மேற்கொண்டு வந்தால் வரி விதிக்கப்படும். இதுதவிர, பயணிகள் கடைசியாக 6 நாட்களில் எந்தெந்த நாட்டுக்கு சென்றனர், அவர்களின் பாஸ்போர்ட் எண்ணையும் குறிப்பிட வேண்டும். இந்த புதிய விதிமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.