மிகக் குறைந்த அளவு நீரில் அதிக மகசூலை அளிக்கக் கூடிய நகரும் பன்முக பாசன நீர்த் தெளிப்பான் கருவியை தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் வடிவமைத்து சாதனை புரிந்துள்ளது.
இந்தப் புதியக் கருவியைப் பயன்படுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் 2 டன் மக்காச்சோளம் விளைவிக்கப்பட்டு மகசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவியை விவசாயிகள் பெருமளவில் பயன்படுத்தும்போது நல்ல பயன் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக கால்நடை பல்கலைக்கழகத்தின் கால்நடை உற்பத்தி கல்வி இயக்குநர் பாபு தலைமையில், பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணை பேராசிரியர் டென்சிங் ஞானராஜ், உதவிப் பேராசிரியர் முத்துராமலிங்கம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து இந்த மூவர் குழு இந்தக் கருவியை வடிவமைத்துள்ளது.
கருவி குறித்து பேராசிரியர் டென்சிங் ஞானராஜ் கூறியது:
பெருகிவரும் தீவனப் பற்றாக்குறையைப் போக்கவும், தண்ணீர் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டும், பல்வேறு ஆராய்ச்சிகளை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பண்ணை மேற்கொண்டு வருகிறது. புதுப்புது கருவிகளை வடிவமைத்து அதை சோதனை செய்து பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் சொட்டுநீர்ப் பாசன முறையில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கால்நடைத் தீவனம் அமோக விளைச்சல் செய்யப்படுவது எங்களுக்குத் தெரியவந்தது. அந்தத் தொழில்நுட்பத்தை அறிய பேராசிரியர் குழு ஸ்பெயின் சென்று ஆலோசனை மேற்கொண்டது. அவர்களின் அனுமதியின் அந்த தொழில்நுட்பத்தை இங்கு கொண்டு வர முடிவு செய்தோம்.
அந்தத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சோதனை அடிப்படையில் நகரும் பன்முகப் பாசன நீர்த் தெளிப்பானை சிறிய அளவில் வடிவமைத்தோம். இதை வடிவமைக்க எங்களுக்கு 3 மாதங்கள் ஆனது. இந்தக் கருவி மூலமாக, மிகக் குறைந்த நீரில் இரண்டு முறை வெற்றிகரமாக விளைச்சல் செய்து, 2 டன் மக்காச்சோளத்தை மகசூல் செய்தோம்.
இப்போது ரூ. 50 ஆயிரம் செலவில் பெரிய அளவில் இந்தக் கருவியை வடிவமைத்துள்ளோம். 90 அடி அகலம் கொண்ட இந்த நகரும் பன்முக பாசன நீர்த் தெளிப்பானில் 16 நீர் தெளிப்பான்களைக் கொண்ட இறக்கை போன்ற அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு நீர்த் தெளிப்பானும் ஒரு நிமிஷத்துக்கு 13 லிட்டர் தண்ணீரைப் பாய்ச்சக் கூடிய திறன் கொண்டது. இதன்மூலம் 30 நிமிஷத்தில் ஒரு ஏக்கர் நிலத்துக்கு நீர்ப் பாசனம் செய்துவிடலாம் என்றார்.
இந்தக் கருவி வித்தியாசமாக இருப்பதுடன் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும். தண்ணீர் பிரச்னை ஏற்பட்டு வரும் இந்தக் காலத்தில் இதுபோன்ற கருவிகள் அவசியமானதுதான்.