வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

லஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி?


திரு. சரவண பிரகாஷ் அவர்களுக்கு, வரும் மாதத்தில், காலிமனை ஒன்று பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, 1. லஞ்சம் கொடுக்காமல் பத்திரம் பதிவு செய்வது எப்படி ?. 2. பத்திர எழுத்தர் மூலமாக பத்திரம் எழுதும் போது எவ்வாறு லஞ்சம் தவிர்ப்பது ? 3. லஞ்சம் கொடுக்காமல் பத்திர பதிவு செய்யும் போது, நமக்கு பதிவு அலுவலகத்தில் ஏதேனும் இடையூறுகள், தடங்கல்கள் ஏற்படுமா ? 4. அவற்றை எப்படி சமாளிப்பது ? 5. வேறு முக்கிய விஷயங்கள் ஏதாவது உள்ளதா ?
என்பதையும் தெரியபடுத்துங்கள்..... நன்றி....

இது நண்பர் ஒருவரின் குறுஞ்செய்தியின் சாராம்சம்....

பலருக்கும் பயனுள்ள கேள்விகள் என்பதால் பதிவாக இங்கே...

முதலில் அனைவரும் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ளவும்..
ஆவணங்களை பதிவு செய்வது சார்பதிவாளர் மட்டுமே தான்...
 அவருக்கு தரகு வேலை செய்து கல்லா கட்டுவது தான்
இந்த ஆவண எழுத்தர்களின் பிரதான வேலை..

பதிவு செய்ய போகும் ஆவணங்களை ஆவண எழுத்தர் தான்
எழுத வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது....

ஆவணத்தை எழுதி கொடுப்பவர்கள் ( சொத்தை விற்பவர்கள்) மற்றும்
தகுதி வாய்ந்த வழக்குரைஞர்களும்    ஆவணங்களை எழுதலாம்..

ஆவண எழுத்தர்களுக்கு அனுபவங்கள் அதிகம் ஆகவே
அவர்களை நாடுகிறார்கள் நம் மக்கள் ...
அவர்களும் அடித்து விடுகிறார்கள்..
(ஆவணங்களை டைப் அடிப்பதை சொல்கிறேன்)

லஞ்சம் கொடுக்காமல் நீங்கள் பதிவு செய்ய நினைத்தால்....

1. நல்ல ஆவண எழுத்தர் ஒருவரை அணுகி தெளிவாக
”எனக்கு ஆவணங்களை தயார் செய்தால் போதும் நானே பதிவு
செய்து கொள்கிறேன்” எனக்கூறி அதன் சம்பந்தபட்ட நகல்களை
கொடுத்தால் அவர்கள் தயார் செய்து தருவார்கள்...
முதலிலேயே அவர்களுக்கான உண்டான கூலியை பேசிக்கொள்ளுங்கள்.
அரசு வழிகாட்டும் கூலியைதான் அவர்கள் வாங்க வேண்டும்...
உதாரணத்திற்கு ஒரு விற்பனை ஆவணம் என்றால் ரூ.50 மட்டுமே...
ஆனால் இது நடைமுறை சாத்தியமில்லை .ஆகவே நியாயமான முறையில்
இருதரப்பும் பேசி கூலியை நிர்ணயத்து கொள்ளவும்...

2.முதல் முறையாக இருப்பின் ஆவண எழுத்தரிடமே
நடைமுறைகளை பற்றியும், என்ன செய்ய வேண்டும் என்பதையும்
நட்பாக பேசி தெரிந்து கொள்ளுங்கள் ...

3.எவ்விதமான சந்தேகம் என்றாலும் சம்பந்தபட்ட சார்பதிவாளர்
உங்கள் சந்தேகம் தீர்வாகும் வரை விளக்க கடமைபட்டுள்ளார்
என்பதை மறவாதீர்கள்..

4.எவ்வளவு தொகைக்கு ஆவணங்கள் வாங்க வேண்டும் ..
எவ்வளவு தொகைக்கு வரைவோலை எடுக்க வேண்டும் என்பதையும்
ஆவண எழுத்தரிடமோ இல்லை சார்பதிவாளரை நேரில் அணுகியோ
தெரிந்து கொள்ளுங்கள்...

5. சார்பதிவாளர் ஏதேனும் சங்கடபட்டலோ எரிந்து விழுந்தாலோ...
ஆவண எழுத்தரிடம் கேட்க சொன்னாலோ...
அய்யா ... எந்தவிதமான புரோக்கர்களையும் அணுக நான் விருமப வில்லை
இந்த அலுவலகத்தின் அதிகாரி நீங்கள் தானே ...
என் சந்தேகங்களுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்... இல்லையென்றால்
தகுந்த அலுவலரை பதில் சொல்ல பணியுங்கள் என்று
மென்மையாக சொன்னால் உங்கள் வேலை சுமூகமாக முடியும்..

6.மக்கள் ஆட்சியில் மக்களே எஜமானர்கள் என்பதை மனதில் வைத்து
நம் செய்யும் செயல்கள் சட்டபடி இருந்தால்
லஞ்சம் கொடுக்காமல் எந்த செயலையும் செய்யலாம் ...

லஞ்சம் தவிர்.... நெஞ்சம் நிமிர்....