செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக சில அரசியல் கட்சிகள் சாதி

வன்முறையை தூண்டிவிடுகின்றன: திருமாவளவன் குற்றச்சாட்டு
 

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக சில அரசியல் கட்சிகள் சாதி வன்முறையை தூண்டிவிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
 
சென்னை தேனாம்பேட்டையில் கூட்டணி ஆட்சி கொள்கை மாநாடு என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய திருமாவளவன், விழுப்புரத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்திலும் தர்மபுரி விவகாரத்திலும் தமிழக அரசு மவுனம் சாதிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் , தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சில அரசியல் கட்சிகள் சாதி வன்முறையை தூண்டிவிடுவதாகவும் தெரிவித்தார்.
 
மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கடந்த ஓராண்டு கால பாரதிய ஜனதா ஆட்சியில், காங்கிரஸ் ஆட்சியை விட ஊழல் அதிகரித்து விட்டதாக விமர்சித்தார். தமிழகத்தில் சாதிய கட்சிகளை ஒருபோதும் காலூன்ற விடமாட்டோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
.