செவ்வாய், 10 நவம்பர், 2015

2 சதவீத ஊக்கத்தொகையினை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளித்துணி, கையால் நெய்யப்படும் ஸ்பன் நூல் ஆகியவற்றுக்கு 2 சதவீத ஊக்கத்தொகையினை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பருத்தி நூல் ஏற்றுமதிக்கு இந்த சலுகை வழங்கப்படாததால் பஞ்சாலைகள் ஏமாற்றம் அடைந்துள்ளன. இந்திய ஜவுளி தொழிற்சாலைகள் தொழில் நசிவு காரணமாக கடந்த 2014 ஏப்ரல் மாதம் முதல் கடுமையான மந்த நிலையை எதிர்கொண்டு வருகின்றன. உலகச்சந்தை, அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை, கூடுதல் வரி விதிப்பு, பருத்தி நூல் மற்றும் கையால் நெய்யப்படும் நூல் விலை அதிகரிப்பு, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது போன்ற காரணங்களால் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளித்துணி, கையால் நெய்யப்படும் ஸ்பன் நூல் ஆகியவற்றுக்கு 2 சதவீத ஊக்க தொகையினை இந்திய வியாபார ஏற்றுமதி திட்டத்தின் (எம்.இ.ஐ.எஸ்) கீழ் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த ஊக்கத்தொகை ஆப்ரிக்கா கண்டம், மத்திய கிழக்கு நாடுகள், இலங்கை மற்றும் வங்கதேசம், ஜப்பானுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது. எனினும் பருத்தி நூல் ஏற்றுமதிக்கு இந்த சலுகை வழங்கப்படாததால் ஜவுளி துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) தலைவர் செந்தில்குமார், செயலாளர் செல்வராஜ் கூறுகையில், ‘‘பருத்தி நூலுக்கும் ஏற்றுமதி சலுகை வழங்க வேண்டும். இந்தியாவில் பெருமளவு ஆயத்த ஆடையை இறக்குமதி செய்வது வங்கதேசம், அந்நாட்டின் நூல் தேவையை, சீனாவுக்கு பதில் இந்தியாவில் இருந்து பெற வேண்டும், என மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் நூல் ஏற்றுமதி அதிகரிக்கும்’’ என்றனர்.

Related Posts: