வியாழன், 5 நவம்பர், 2015

நாட்பட்ட கபம், இருமலைப் போக்கும் “சிற்றரத்தை”

ரவி லேப் பட்டுக்கோட்டை's photo.

நுரையீரல் சுத்தமாக, இருமல் இல்லாமல் போக… பல் பிரச்னைகள் தீர., இன்னும் பல பயன்கள் – சித்தரத்தை பயன்படுத்துங்கள்.பழங்காலத்தில் ஒரு பழமொழி சொல் வார்கள் – “அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்”? எவ்வளவு நாட்பட்ட கபம், இருமலானாலும் சித்தரத்தை உடனே செயல்பட்டு கபத்தை வெளியேற்றும்.வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் மூலிகைகளில் சிற்றரத்தையும் ஒன்று. இதனை அலோபதி மருந்துகளாக மாற்றி நமது நாட்டிற்கு திருப்பி அனுப்புகின்றனர்.
சிற்றரத்தையின் தாவர இயல் பெயர் – Alpinia Galanga அரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை
சிற்றரத்தை பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.
பொது குணங்கள் - கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும்.
மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங் காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது.
சிற்றரத்தை Bronchioles எனப்படும் நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது. பைலோ கார்பின் என்னும் மருந்தை ஊசி மூலம் ஏற்றி ஆஸ்துமா போன்றதொரு நிலையை ஏற்படுத்திய சில விலங்குகளுக்கு சிற்றரத்தை டிங்க்சர் (Tincture of A.Galanga) சிறு அளவில் கொடுக்கப் பட்டதும் மூச்சிழுப்பு (ஆஸ்த்துமா) சீரைடந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் தென்னாடு எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சிற்றரத்தை இடம் பெற்றிருந்தது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இருமலின் தாக்கமும் இழுப்பும் குறைந்தது.
சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த நோய்கள், கணை இழப்பு, கப நோய்கள், போன்றவற்றிற்கு சிற்றரத்தையை ஆமணக்கெண்ணெயில் நனைத்துச் சுட்டுக் கரியாக்கி சிறிதளவு தேனில் உரைத்துக் கொடுத்தால் உடனடி குணம் தெரியும். ஐந்தாறு வயதுக் குழந்தைகளுக்குத் தோன்றும் சீதளக்காய்ச்சல், சாதாரணக் காய்ச்சல், வாத பித்த நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பிணிகளுக்கு நூறு கிராம் சிற்றரத்தை பொடியாக்கி கொள்ள வேண்டும். நூறு கிராம் கற்கண்டை பொடியாக்கி தனியாகப் பொடியாக்கி அதனுடன் சிற்றரத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை ஒரு சிட்டிகை அளவு வாயிலிட்டு சிறிதளவு பசும்பாலுடன் குடிக்க வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் பிணிகள் அகலும். பெரியவர்களுக்கு தோன்றக்கூடிய வாயுக்கோளாறுகள், இருமல், தலைவலி, சீதளக் காய்ச்சல், வாந்தி, பித்தம் மற்றும் சுவாசக்கோளாறுகள் நிமோனியாபோன்ற பிணிகளுக்கு புளியங்கொட்டை அளவுக்கு சிற்றரத்தை ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு சிதைத்து 200மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து நீர் கொதித்த பிறகு இறக்கி சில மணிநேரங்களுக்கு அப்படியே வைத்துவிட வேண்டும்.
பின்னர் அந்த நீரை வடிகட்டி எடுத்து அதனுடன் ஐம்பது கிராம் கற்கண்டை பொடித்துப் போட்டு வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் மூன்று வேளை குடித்து வர பெரியவர்களுக்கு பிணிகள் அகன்று குணம் தெரியும். சிற்றரத்தை, திப்பிலி, தாளிச பத்திரி ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் சேகரித்து கொள்ள வேண்டும். அம்மியை சுத்தமாகக் கழுவி அதில் சேகரித்த பொருட்களுடன் சிறிது நீர் விட்டு நைய அரைத்து கொள்ள வேண்டும்.அரைத்த விழுதை 100 மிலி நீரில் கரைத்து கொதிக்க விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த மருந்தை பலவித நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம்
சிற்றரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். (Breath refresher). இதன் நறுமணம் காரணமாக இதைப் பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு.
பிற உபயோகங்கள்
சித்தரத்தை அரிப்பு, வீக்கம், பல் நோய், போன்றவற்றிக்கும் நல்லது.
ருமாடிஸம், ஜூரம் போன்றவற்றிற்கும் மருந்தாக பயன்படுகிறது.
ஒரு துண்டு சித்தரத்தையை வாயிலிட்டு மென்றால், தொண்டையில் கட்டும் கோழை, வாந்தி, இருமல் தணியும்.