அப்துல் நாசரின் "கோவை கலவரத்தில் எனது சாட்சியம்"
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1996 - 2001 காலத்தில் புவனகிரி தொகுதியில் 'இந்திய தேசிய லீக்' (தி.மு.க கூட்டணி) சார்பாக நின்று வெற்றி பெற்ற சட்ட மன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல் நாசர் அவர்கள் எழுதியுள்ள 'கோவைக் கலவரத்தில் எனது சாட்சியம்' எனும் நூலின் லேஅவுட் செய்யப்பட்ட பிரதியை முன்னுரை எழுதுவதற்காகச் சற்று முன்தான் வாசித்து முடித்தேன்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1996 - 2001 காலத்தில் புவனகிரி தொகுதியில் 'இந்திய தேசிய லீக்' (தி.மு.க கூட்டணி) சார்பாக நின்று வெற்றி பெற்ற சட்ட மன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல் நாசர் அவர்கள் எழுதியுள்ள 'கோவைக் கலவரத்தில் எனது சாட்சியம்' எனும் நூலின் லேஅவுட் செய்யப்பட்ட பிரதியை முன்னுரை எழுதுவதற்காகச் சற்று முன்தான் வாசித்து முடித்தேன்.
அற்புதமான நூல். அவர் சொல்ல பழனி ஷஹான் எளிய நடையில் விறுவிறுப்பாக ஆக்கியுள்ளார். 1997 நவம்பர் மாதத்தில் காவல்துறையும் இந்து வெறி அமைப்புகளும் இணைந்து கோவையில்முஸ்லிம்களைக் கொன்றார்கள் அரசாங்கம் சொன்ன கணக்கே 14 பேர். (காணாமல் போனவர்கள் 10 பேர்). முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அதை ஒட்டி உருவான தீவிரவாத இயக்கம் ஒன்று மேற்கொண்ட தொடர்குண்டு வெடிப்பில் 58 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து கோவை முஸ்லிம்கள் மீது கடும் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. உண்மைக் குற்றவாளிகள் தவிர பல அப்பாவிகளும் கைது செய்யப்பட்டு சுமார் 9 ஆண்டுகள் வரை சிீறைப்படுத்தப்பட்டனர். சிறைக்குள்ளும் பல கொடுமைகள்.
இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் அமைப்புகள் சார்பான ச.ம.உ க்களாக இருந்தவர்கள் அப்துல் நாசர் மற்றும் நாகூர் நிஜாமுதீன் ஆகியோர் மட்டும்தான்.
அப்துல் நாசர் அவர்கள் தனது பதவிக் காலத்தில் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு அவரால் முடிந்த அளவிற்கு பல்வேறு இடர்ப்பாடுகள் மத்தியில் நீதி கிடைக்க மேற்கொண்ட முயற்சிகள்தான் இந்த நூல்.
இதுபோன்ற பிரச்சினைகளில் உண்மையைச் சொல்வதே எத்தனை இட்ர்ப்பாடுகள் நிறைந்த ஒன்று, அது எப்படி ஆளும் வர்கத்தாலும், ஊடகங்களாலும், பொதுப் புத்தியாலும், பொலீசாலும் எதிர்கொள்ளப்படும் என்பதை இதுபோன்ற விடயங்களில் தலையிட்டவர்களே உணர்வர்.
எந்த வகையிலும் தீவிரவாதத்துக்குத் தான் ஆதரவில்லை என்பதை நிறுவிக்கொண்டே உண்மைகளைச் சொல்லியாக வேண்டும்.
அந்த வகையில் அப்துல் நாசர் அவர்கள் ஆக்கியுள்ள இந்தத் தொகுப்பு பல முக்கியமான உண்மைகளை மிகவும் துணிச்சலாக வெளிக்கொணர்கிறது.
சேகரித்த தகவல்களில் சில குறைபாடுகள் இருக்கலாம். சொன்னவர்கள் சிலவற்றைக் கூட்டியும் குறைத்தும் சொல்லி இருக்கலாம். ஆனால் அடிநாதமாக நாசரின் இந்நூலில் உண்மை இழையோடுவதை வாசிக்கும் யாரும் அறிந்து கொள்ள இயலும்.
நூல் வந்தபின் வாசியுங்கள்.
நான் இங்கு சொல்ல வந்தது இன்று இந்த நூலின் ஊடாக நான் சந்தித்த ஒரு வியப்பு.
ஒரு தீவிரவாதப் பிரச்சினையில் நாம் ஏன் தலையிடுவானேன் என இதரப் பிரச்சினைகளிலும், தொகுதிப் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்த நாசர் அவர்களை சௌகத் அலி எனும் ஒரு பத்திரிகையாளர் சந்தித்து துஷார் காந்தி உங்களைச் சந்திக்க வேண்டும் எனச் சொல்கிறார்.
துஷார் காந்தி !
மகாத்மா காந்தியின் மகன் மணிநால் காந்தியின் பேரர். எழுத்தாளர் துஷார் காந்தி !
சந்தித்தபோது அவர் சொல்லுகிறார்,
"கோவைக் கலவரத்தை ஒட்டி் முஸ்லிம்கள் மீது கடும் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிகிறேன். மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களில் கூட அப்பாவிகள் பிணையில் வெளி வருகின்றனர். நீங்கள் ஏன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், சிறைகளில் இருப்பவர்களுக்கும் சட்ட ரீதியான உதவிகளைச் செய்யக் கூடாது ?"
இப்படித் துஷார் காந்தி கேட்டதில் ஊக்கம் பெற்றுத்தான் அப்துல் நாசர் களத்தில் இறங்குகிறார். பாதிக்கப்பட்ட மக்களே வெளியில் வந்து பேச இயலாத, தயாரில்லாத சூழலில் படாத பாடுபட்டுப் பல முயற்சிகளைத் தான் மேற்கொள்வதற்குக் காரணமாக இருந்தவர் துஷார் காந்தி என நாசர் சொல்வதை அறிந்த போது நான் அடைந்த வியப்பு சொல்லி மாளாது.
எங்கோ இருந்த அந்த எழுத்தாளர் இங்குள்ள முஸ்லிம்களின் நிலையைக் கவனித்து, யாரிடம் சொல்லி இதைச் செய்ல்படுத்தலாம் எனத் தேர்வு செய்து இந்தப் பணியைச் செய்ய மேற்கொண்ட இந்த முயற்சியை என்ன சொல்வது.
காந்தியின் இரத்தம்....
(படத்தில் துஷார் காந்தி)
