மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவின்படி நீர் நிலைகளில் உள்ள சீமைக் கருவை மரங்களை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரவித்தார்.
இதுதொடர்பாக வேளச்சேரி தி.மு.க எம்.எல்.ஏ வாகை சந்திரசேகர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார். மூடப்பட்ட திருநெல்வேலி பேட்டையில் உள்ள நூற்பாலை மீண்டும் திறக்கப்படுமா என்று தி.மு.க எம்.எல்.ஏ லட்சுமணன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தமிழகத்தில் இருந்த 18 நூற்பாலைகளில் 12 நூற்பாலைகளின் நஷ்ட மதிப்பு அதிகமானதால்தான் மூடப்பட்டதாக தெரிவித்தார். மீதமுள்ள நூற்பாலைகளுக்கு அரசு 175 கோடி ரூபாய் ஒதுக்கி நவீனமயமாக்கப்பட்டதால், தற்போது 5 நூற்பாலைகள் லாபத்தில் இயங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கேள்வி நேரத்திற்கு பிறகு தகவல் கோரல் முறையில் தி.மு.க உறுப்பினர் கே.என்.நேரு, போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான அரசின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும், புதிய ஒப்பந்தத்திற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பதிவு செய்த நாள் : August 12, 2016 - 04:49 PM
Source; New Gen Media