செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

ஒப்பந்தமோ ரத்து, இழப்போ பல ஆயிரம் கோடி!

விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அளவில் ஆறாவது இடத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல புதிய சாதனைகளை படைத்துக் கொண்டே வருகிறது. ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட்டை வரும் டிசம்பர் மாதம் அனுப்ப இருக்கிறது. ஓராண்டுக்கு 6 முதல் 8 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தொடர் சாதனைகளை புரிந்து வரும் இஸ்ரோ அமைப்புக்கு கடந்த வாரம் வந்த ஒரு தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் தேவாஸ் - ஆண்ட்ரிக்ஸ் ஒப்பந்தம் செல்லாது என்று இந்திய அரசு அறிவித்தது நியாயமற்றது என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச தீர்ப்பாயம் கடந்த வாரம் செவ்வாய்கிழமை (26-07-2016) தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பால் இந்திய அரசு 6,669 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு மதிப்புள்ள தொகையை இழப்பீடாக வழங்கும் அளவிற்கு இந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது? ஒப்பந்தத்தால் ஏற்பட்ட பிரச்சினை என்ன?
தேவாஸ் ஆண்ட்ரிக்ஸ் ஒப்பந்தம்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் வர்த்தக நிறுவனம்தான் ஆண்ட்ரிக்ஸ். இஸ்ரோவின் தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள், அலைக் கற்றைகளை சந்தைப்படுத்துதல் போன்ற வற்றை ஒப்பந்த அடிப்படையில் பிற நிறுவனங் களுக்கு வழங்குவதற்காக இந்த நிறுவனம் பெங்களூருவை மையமாக கொண்டு 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிறகு இந்த நிறு வனத்தை மத்திய அரசு கையகப்படுத்திய பிறகு பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. 2014-15 ஆம் ஆண்டில் மட்டும் இந்நிறுவனம் 1,860 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் முன்னாள் இஸ்ரோ தலைவர் மற்றும் ஊழியர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனம். 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனமும் பெங்களூருவை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அமெரிக்க நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.
இஸ்ரோவின் சேவைகளை பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் மற்ற நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொள்வது வழக்கம். ஜிசாட் 6 மற்றும் ஜிசாட் 6ஏ ஆகிய செயற்கைகோள்கள் மூலம் எஸ் பேண்ட் அலைவரிசையை பயன்படுத்தி செல்போன்களுக்கு வீடியோக்கள், மின்னணு குறுந்தகவல்கள் சேவைகளை வழங்குவதற்காக 2005-ம் ஆண்டு ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் தேவாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 1,000 கோடி ரூபாய்.
இந்த ஒப்பந்தத்தின்படி 70 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை தேவாஸ் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. இதற்காக ஜிசாட் 6 செயற்கைகோளை 269 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கவும் ஜிசாட் 6ஏ செயற்கைகோளை 147 கோடி ரூபாய் மதிபீட்டில் உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஒப்பந்தத்தில் முறைகேடு
12 ஆண்டுகளுக்கு இந்த சேவைகளை வழங்க இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால் ஒப்பந்த தொகையான 1,000 கோடி ரூபாய் அன்றைய சந்தை விலையை விட குறைவாக இருப்பதாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.
இதே ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்களுக்கு 20 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை வழங்குவதற்கு 12,487 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டிருந்தது. ஆனால் தேவாஸ் நிறுவனத்திற்கு மட்டும் ஒப்பந்த தொகை குறைவாக இருப்பது ஏன் என்ற கேள்வி பல்வேறு தரப்பில் இருந்து எழுப்பப்பட்டது. அப்போதைய இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இந்த ஒப்பந்த விவகாரங்களை மத்திய பொது கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்தது. ஆய்வு முடிவில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் இஸ்ரோவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தது.
பிறகு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஊழல் கண்காணிப்புத் துறை முன்னாள் ஆணையர் சின்ஹா தலைமையிலும், இஸ்ரோவின் ஆர்.கே.சதுர்வேதி தலைமையிலும் உயர் நிலைக் குழுக்களை நியமித்தார். சின்ஹா மற்றும் சதுர்வேதி தலைமையிலான இரு குழுக்களுமே இந்த ஒப்பந்தம் முறைகேடானது என்று தமது அறிக்கையில் தெளிவுபடுத்தின. மேலும் தேவாஸ் நிறுவனத்திற்கு வழங்க கூடிய அலைக்கற்றையின் திறன் எவ்வளவு என்பது தெரியாமலேயே மத்திய அரசின் அனுமதி பெற்றுள்ளதும் தெரிய வந்தது. மேலும் அந்நியச் செலாவணி முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் 2012-ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. விசாரணையில் ரூ.1,217 கோடி ரூபாய் அளவுக்கு அந்நியச் செலாவணி முறைகேடு நடந்திருப்பதாக தெரியவந்தது. இதன் அடிப்படையில் ஆண்ட்ரிக்ஸ் தேவாஸ் இடையேயான ஒப்பந்தத்தை 2011 பிப்ரவரி மாதம் மத்திய அரசு ரத்து செய்ய உத்தரவிட்டது.
ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தேவாஸ் நிறுவனம் சர்வதேச வர்த்தக கூட்டமைப் பிடம் முறையிட்டது. ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் 67.20 (இந்திய மதிப்பில் ரூ.4,000 கோடி) கோடி டாலரை அபராதமாக இஸ்ரோ அளிக்க வேண்டுமென சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு உத் தரவிட்டது. அத்துடன் 18% வட்டியுடன் இத் தொகையை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் இழப்பீடு தொகை போதவில்லை என்று தேவாஸ் நிறுவனம் சர்வதேச தீர்ப்பாயத்தை நாடி யது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தை ரத்து செய் தது முறையற்றது எனவும் இஸ்ரோ இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வந்துள்ளது. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாயை இழப்பீடாக தேவாஸ் நிறுவனத்துக்கு இஸ்ரோ வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசியல் காரணங்கள்
மன்மோகன் சிங் அரசு அவசர அவசரமாக ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் விளைவே இவ்வளவு பெரிய தொகையை இழப்பீடாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நிர்வாக ரீதியான காரணங்கள் இருக்கிறது. அப்போதைய சூழலின் போது 2ஜி உரிமங்கள் வழங்கியது மற்றும் பிற ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக மன்மோகன் சிங் அரசு மீது வந்து கொண்டே இருந்தன. அதன் விளைவாகத்தான் அவர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக ஒப்பந்தத்தை ரத்து செய்தது இன்று வெளிநாட்டு உறவு மற்றும் இவ்வளவு தொகை இழப்பீடாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது அரசு நிர்வாகத்தின் தோல்வியே என்கிறார்கள் இந்த துறை சார்ந்தவர்கள்.
``மேக் இன் இந்தியா’’, இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என்று பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கு சென்று பேசி வருகிறார். அதனால் முதலீடுகளும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் போது அதை சரியாக பின்பற்றவேண்டியதும் ஒப்பந்ததில் வெளிப்படைத்தன்மையும் வேண்டும் என்பதற்கு ஆண்ட்ரிக்ஸ்- தேவாஸ் விவகாரம் மிகப் பெரிய பாடமாக அமையும்.
http://tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/article8927411.ece