உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேசிய கீதம் பாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக அதன் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பதவி விலகினர்.
வருகிற சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் மற்றும் சரஸ்வதி வந்தனம் பாட அனுமதி கோரி பள்ளி நிர்வாகத்தை தாம் அணுகியதாகவும், ஆனால் அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும் பதவி விலகிய முதல்வர் கூறியிருக்கிறார்.
தேசிய கீதத்தில் வரும் “பாரத பாக்ய விதாதா” என்ற வரி இஸ்லாம் மதத்திற்கு எதிராக இருப்பதாகவும் ஆகவே, அதனைப் பாட அனுமதிக்க முடியாது என்றும் பள்ளி நிர்வாகம் கூறியதாகத் தெரிகிறது. இந்த காரணத்திற்காக கடந்த 15 ஆண்டுகளாக தங்களது பள்ளியில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை என்று நிர்வாகிகள் விளக்கமளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அந்தத் தனியார் பள்ளி அரசின் அனுமதியின்றி செயல்பட்டு வருவதால் அதனை மூடுமாறு ஒரு வாரத்திற்கு முன்பே கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த தனியார் பள்ளிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகள் வேகமாகப் பரவி வருகின்றன. சம்பந்தப்பட்ட பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.
August 07, 2016 - 02:01 PM
http://tv.puthiyathalaimurai.com/detailpage/ImportantNews/india/7/46080/shocking-allahabad-school-issues-diktat-against-reciting-national-anthem