நியூயார்க்கில் தலைகீழான U வடிவ கட்டிடம் ஒன்று உருவாக்கப்பட இருக்கிறது.
துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா உலகின் உயர்ந்த கட்டிடமாக விளங்கி வருகிறது. துபாயிலுள்ள சுற்றுலா தளங்களில் புர்ஜ் கலீபா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் கட்டிடத்தை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு, அதன் உயரம், அழகைக் கண்டு பிரமித்துச் செல்கிறார்கள்.
இந்நிலையில் அந்தக் கட்டிடத்தை முறியடிக்கும் விதமாக, சுமார் 1,220 மீட்டர் உயரத்திலான கட்டிடம் ஒன்றை நியூயார்க்கில் வடிவமைக்க உள்ளனர். இதன் உயரத்தை விட மிக பெரிய சாதனை என்னவென்றால், இது தலைகீழான U வடிவில் அமைக்கப்படவுள்ளது. இக்கட்டிடத்துக்கு பிக் பெண்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்டிட கலையில் புகழ்பெற்ற மன்ஹாட்டனை சேர்ந்தவர்கள், இந்தக் கட்டடத்தை வடிவமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வளைவான வகையில் கட்டிடத்தை அமைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் இந்த கட்டிடம் 4,000 அடிக்கு வளைவாகவும் செங்குத்தாகவும் உருவாக்கப்படுகிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் உலக அதிசயங்களில் கூட யு வடிவ கட்டடம் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவு செய்த நாள் : April 02, 2017 - 11:35 AM