சனி, 29 ஏப்ரல், 2017

தமிழர் நாகரிகத்தை இந்துத்துவ நாகரிகமாக மாற்ற முயற்சியா? கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியை அழிக்க மத்திய அரசு முயற்சி

தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்ற கிராமத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி தமிழர்களின் புராதன நாகரிகம் வெளிச்சத்துக்கு வரும் நிலையில் அந்த ஆராய்ச்சியை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சி செய்கிறது.
கிமு 2ம் நூற்றாண்டு முதல் கிபி 10ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட தமிழர்களின் தொன்மையான நாகரிகத்துக்கு சான்றாக கீழடி ஆய்வு இருக்கிறது.
சங்ககாலத்தில் கட்டிடங்கள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படும் கூற்றை இந்த ஆய்வுகள் பொய்யாக்கி உள்ளன. செங்கல் கட்டிடங்கள், குழாய்கள் பதித்த கழிவுநீர் தொட்டிகள், சுடு உறை கிணறுகள் என்று வியப்பை ஏற்படுத்தும் நாகரித்துக்கு சொந்தக்காரர்கள் கீழடியில் வாழ்ந்திருப்பது தெரியவருகிறது.
ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்ததற்கான சான்றுகளும் வெளிப்படுகின்றன. எனவே, கீழடியை பாதுகாக்கப்பட்ட அருங்காட்சியகமாக மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
பாதுகாப்பு இல்லாததால் பல அறிய பொருட்கள் சேதப்படுகின்றன என்று ஆய்வு குழுவினர் கூறினார்கள். ஆனால், அரசு இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் அகழ்வாராய்ச்சி பணிக்குழு தலைவராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவை மத்திய அரசு பணியிடமாற்றம் செய்தது. இதை தமிழ் அமைப்புகள் வன்மையாக கண்டித்தன. அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பின.
போதுமான நிதியும் பாதுகாப்பும் வழங்க மத்திய அரசு மறுப்பதற்கு இந்துத்துவ போக்குதான் காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சில நாட்களுக்குமுன் கீழடிக்கு வந்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாவையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் தமிழ் அமைப்புகள் கருப்புகொடி காட்டி கண்டனத்தை தெரிவித்தன.
அப்போது அந்த அமைப்பினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். பாதுகாக்கப்பட்ட தொல்லியல் ஆய்வுப்பகுதியில் பாஜகவினர் நடத்திய இந்த தாக்குதலை போலீஸார் தடுக்க ஏற்பாடு செய்யவில்லை.
இந்நிலையில் அகழ்வாராய்ச்சி பணிக்கு 40 லட்சம் ரூபாய் ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார். இந்த 40 லட்ச ரூபாய் 4 மாதங்களுக்குகூட போதாது என்று ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.

http://kaalaimalar.net/why-the-excavation-of-an-ancient-2500-year-old-tamil-city-keeladi-has-not-reached-main-stream-media/