வெள்ளி, 28 ஏப்ரல், 2017

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதலா..? வடகொரியா வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.

அமெரிக்காவின் போர் கப்பல்கள் மற்றும் வெள்ளை மாளிகையை தாக்குவது போன்ற மாதிரி வீடியோவை வடகொரியா வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி அணு குண்டு சோதனை மற்றும் ஏவுகனை சோதனைகளை நடத்தி வருகிறார்.
இதனால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, யூஎஸ்எஸ்.கார்ல் வில்சன் என்ற விமானம் தாங்கி போர் கப்பலையும், அதனுடன் போர்படை அணியையும் மற்றும் யூஎஸ்எஸ்.மிச்சிகன் என்ற நீர்மூழ்கி போர் கப்பலையும் கொரிய பிராந்தியத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
இதற்கு கொஞ்சமும் அஞ்சாத வடகொரியா, அமெரிக்க படைகளில் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள் என்று எச்சரித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து போருக்கு நாங்கள் வழிவகுக்கவில்லை என்றும், வடகொரியா அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை நிறுத்துவதற்காகவே முயற்சிப்பதாக அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் அமெரிக்க போர்கப்பல்களை தாக்குவது போன்றும், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தாக்குவது போன்றும், மாதிரி வீடியோவை வடகொரியா இன்று வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், வடகொரியா நடத்திய ஏவுகனை சோதனை தொடர்பான காட்சிகளும் இணைக்குப்பட்டுள்ளது. மேலும் வடகொரியாவை தாக்க முயற்சித்தால், அவர்கள் அழிவை சந்திப்பார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.