ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

தேனி அருகே திறந்த வெளியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்! April 30, 2017


தேனி அருகே திறந்த வெளியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்!

தேனி அரசு மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளை முறையாக அழிக்காமல் திறந்த வெளியில் கொட்டுவதால், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் விலக்கு பகுதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை. கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த  அரசு மருத்துவமனைக்கு தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் இருந்தும் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பலனடைந்து வருகின்றனர். 

இந்த மருத்துவமனையில் சேரக்கூடிய மருத்துவ கழிவுகள்,  திருமலாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. முறையாக பள்ளம் தோண்டி மருத்துவ கழிவுகளை கொட்டாமல் ஆங்காங்கே கொட்டுவதால்  மருத்துவ கழிவுகள் அனைத்தும் மலை போல் குவிந்துள்ளது. 

மருத்துவ கழிவுகளை ஏற்றி வரும் வாகனம் சாலை முழுவதும் கழிவுகளை இறைத்தவாறே செல்வதால், சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

பல மாதங்களாக கிடக்கும் மருத்துவ கழிவுகளால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுவதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.