வெள்ளி, 28 ஏப்ரல், 2017

பேச்சுவார்த்தை பயனளிக்காவிட்டால் போர் தொடுப்போம்: ட்ரம்ப் April 28, 2017

பேச்சுவார்த்தை மூலம் வடகொரியப் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

வடகொரியா சர்வதேச விதிமுறைகளை மீறி தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளை நடத்திவருகிறது. தென்கொரியா மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தும் அச்சமும் எழுந்துள்ளது. இதையடுத்து, தென்கொரியாவுக்கு உதவும் வகையில் நட்பு நாடான அமெரிக்காவின் அதி உயர ஏவுகணை எதிர்ப்புப் படைப்பிரிவை நிறுவும் முயற்சிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 

வடகொரியாவுடன் பேச்சு நடத்துமாறு சீனாவை அமெரிக்கா வலியுறுத்தும் நிலையில், அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய ட்ரம்ப், கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைப் போக்க பேச்சுவார்த்தை நடத்தவே தாம் விரும்புவதாகவும், அது பயனளிக்காத நிலையில், மிகப்பெரிய போரைத் தவிர்க்க முடியாது என்றும் கூறியுள்ளார்.